sasikala 33 years sketch closed in seconds

மக்களை நேரடியாக சந்திக்காமல், கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பொறுப்பும் வகிக்காமல், அதிமுமுக என்ற கட்சியையும் அதன் ஆட்சியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரை மறைவில் இருந்து ஆட்டிப்படைத்த சசிகலா, இந்த நூற்றாண்டின் இணையற்ற ராஜ தந்திரி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அதிமுகவை கைப்பற்றினார் ஜெயலலிதா. அன்று முதல் இன்று வரை, அதிமுகவின் அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்தவர் சசிகலா.

ஆனால், இதற்கான ஸ்கெட்ச் 33 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டு, அது மிக, மிக கவனமாக செயல் படுத்தப்பட்டு வந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பே இதை உணர்ந்த வலம்புரி ஜான், சசிகலாவும் ஒருகாலத்தில் முதலமைச்சர் ஆவார் என்று அன்றே தீர்க்க தரிசனமாக சொன்னார்.

அவர் சொன்னது போன்றே, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதல்வர் நாற்காலியில் அமரும் நிலையை, சசிகலா உருவாக்கி விட்டார். 

ஆனாலும், அவருடைய கேட்ட நேரம், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அந்த கனவு கலைந்தது.

ஜெயலலிதா என்பது பொன் முட்டையிடும் வாத்து, அந்த வாத்தை அழிக்காமல், அதன் முட்டைகள் அனைத்தையும் கவர்ந்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு, அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் போட்ட ஸ்கெட்ச்.

அதன் படி, முதல் கட்டமாக, ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த, உதவியாளர்களாக இருந்த அனைவரும், திட்டமிட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம் அம்மாவை தவிர அனைவரும் இருக்கும் இடமே தெரியாமல் செய்து விட்டது சசிகலாவின் ஸ்கெட்ச். அந்த வகையில், சசிகலா மூலமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டும். 

ஜெயலலிதாவிடம் ஒருவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்து விட்டால், அவர்கள் ஜெயலலிதாவை நேசிக்க ஆரம்பித்து விடுவர். அதனால், அவரோடு யாரையும் நெருங்க முடியாமல் பார்த்து கொண்டதே சசிகலாவின் முதல் அஜெண்டா.

கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் பணியாளர்கள் யாரிடமாவது ஜெயலலிதா பேச நேர்ந்து விட்டால், அடுத்த முறை ஜெயலலிதா வரும்போது அந்த பணியாளர் அங்கு இருக்க மாட்டார் என்று, அங்கு பணியாற்றிய கார் ஓட்டுநர் ஒருவர் அளித்த பேட்டியே அதற்கு சான்றாகும்.

அதேபோல், கட்சியிலும், ஆட்சியிலும் ஒருவரை நுழைக்கவேண்டும் என்றோ, நீக்க வேண்டும் என்றோ சசிகலா தரப்பு முடிவெடுத்து விட்டால், அந்த பணி, அதற்கு ஒருவரிடத்திற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விடும்.

அதன் படியே, சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு உறவுகளும் குடும்பம், குடும்பமாக அதிமுகவின் அதிகார மையங்களாக நிலை நிறுத்தப்பட்டன.

அதேபோல், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அனைவரும், குறிப்பாக, அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பம் வரை ஓரம் கட்டப்பட்டு, போயஸ் கார்டன் பக்கம் தலை காட்ட முடியாமல் செய்யப்பட்டதும் அப்படித்தான்.

சுருக்கமாக சொன்னால், ஜெயலலிதா வீட்டின் துப்புரவு பணியாளர் தொடங்கி, தமிழக அரசின் தலைமை செயலாளர் வரை, அனைவருமே சசிகலாவின் சாய்சாகவே இருந்தது.

2011 ம் ஆண்டு, இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த ஜெயலலிதா, சசிகலாவின் குடும்ப உறவுகள் அனைத்தையும் கூண்டோடு வெளியேற்றினார்.

நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் தொடர்புடைய, சசிகலா உறவினர்களை புரட்டி புரட்டி எடுத்தது காவல் துறை.

உடன் பிறந்த தம்பி திவாகரனை, போலீஸ் கவனித்த விதம், சசிகலாவின் இதயத்தையே ரணமாக்கியது. ஆனாலும் ஆட்சி அதிகார லட்சியம், அவரால் ஜெயலலிதாவிடம் எதுவும் கேட்க முடியாமல் செய்து விட்டது.

சசிகலாவின் சகோதரி வனிதாமணி சாவு உள்ளிட்ட ரத்த சொந்தங்களின் சாவில் பங்கேற்க கூட சசிகலாவை அனுமதிக்கவில்லை ஜெயலலிதா. அப்படி அதில் பங்கேற்றால், மீண்டும் கார்டன் பக்கம் வரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் உத்தரவாக இருந்தது.

ரத்த பந்தங்களின் இழப்பைவிட, போட்டு வைத்த ஸ்கெட்ச்சே முக்கியம் என்று, அனைத்தையும் தவிர்த்து, மனதை கல்லாக்கிக்கொண்டு ஜெயலலிதா கூடவே இருந்தார் சசிகலா.

ஆனாலும், அதை தொடர்ந்து சசிகலாவின் திரை மறைவு சதி வேலைகளை அறியாமலே, ஜெயலலிதாவும் அதற்கு உடன்படும் நிலைக்கு ஆளானார்.

கடந்த தேர்தலில், சசிகலாவின் ஆதரவு வட்டத்திற்கே அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையிலும் சசிகலா ஆதரவாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

சாதாரண ஊழியர் தொடங்கி, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வரை சசிகலாவின் ஆதரவாளர்களே முக்கிய பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், எந்த எதிர்ப்பும் இல்லாமல், கட்சியின் பொது செயலாளராகவும் ஆனார் சசிகலா. அடுத்து முதல்வர் நாற்காலியை நெருங்கும்போதுதான், அவருக்கு சிக்கல் ஆரம்பித்தது.

அவருக்கு ஆரம்பித்த சிக்கல்கள் அனைத்தும், மற்றவர்கள் உருவாக்கியது அல்ல. அவரே உருவாக்கிக் கொண்டதுதான். அதை வசமாக பயன்படுத்திக்கொண்ட எதிர் தரப்பு அவரை எழவிடாமல் செய்து விட்டது.

தாமாக தலையை கொடுப்பது போல், அவரது உறவுகள் மற்றும் ஆதரவுகள், பல வழக்குகளில் சிக்கி தமக்கு தாமே குழி பறித்துக் கொண்டன.

33 வருடமாக ஸ்கெட்ச் போட்டு, திட்டமிட்டு உருவாக்கிய அந்த ரகசிய கோட்டையில், அவருக்கு தெரியாமலே சில ரகசிய ஓட்டைகளும் இருந்துள்ளன.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்கிற பாணியில், அவருடைய எதிரிகள் அந்த ஓட்டையில் புகுந்து புறப்பட்டு, சசிகலாவுக்கு தண்ணீர் காட்ட தொடங்கி விட்டனர். 

அதனால், அவர் உருவாக்கிய 33 வருட சகுனி சாம்ராஜ்ஜியம் அழிவுக்கு வந்துள்ளது.