தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ பட விவகாரம் பற்றி எரிந்துவரும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அவசரமாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை சந்தித்தார்.

தமிழக அரசின் இலவசத் திட்டங்களை தீயிலிட்ட காட்சிகளுக்காகவும், முன்னாள் முதல்வர் ஜெ’வின் பெயரை படத்தின் வில்லிக்கு சூட்டியதற்காகவும் ‘சர்கார்’ படத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை இருக்கும் என்று அமைச்சர் கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 

படம் குறித்து தி.மு.க. தொடர்ந்து கள்ளமவுனம் சாதித்துவரும் நிலையில், வி.சி.க. தலைவர் திருமா, பா.ஜ.க. மற்றும் இதர கட்சியினர் நடிகர் விஜயையும், இயக்குநர் முருகதாசையும் வன்மையாக கண்டித்தாலும் சென்ஸார் செய்யப்பட்ட ஒரு படத்துக்கு தடைபோடுவதையோ, மதுரையில் நடைபெறுவதுபோல் தியேட்டருக்குள் புகுந்து திரையிடலை நிறுத்துவதையோ ஆதரிக்கவில்லை. 

படத்தை சில அமைச்சர்களை விட்டுப்பார்க்கசொல்லி வெட்டவேண்டியவைகளை இயக்குநருக்கு கமுக்கமாக  லிஸ்ட் போட்டுக்கொடுப்பது. அல்லது மக்களின் மனம் புண்பட்டதால் மறு சென்ஸார் போன்ற வழிகளில் சட்டரீதியாக சர்காரின் சட்டையைப் பிடிப்பது எப்படி என்பது குறித்து இந்த அவசர ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.