Saravana Store:அண்ணாச்சி.. அபராதம் கட்டினால் தப்பிக்கலாம் இல்லனா ஆப்புதான். சட்டம் சொல்வது இதுதான்.
25 லட்சம் இதை விட குறைவாக வரியேய்ப்பு செய்யப்பட்டிருந்தால் 3 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அதனுடன் அபராத தொகையும் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரிந்தே வருமான வரி ஏய்ப்பு செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என புதிய சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இந்ந விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகை கடை என பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி. நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் அதற்கான கிளைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தைக் குறைத்து கணக்கு காட்டியதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை என சரவணாஸ் ஸ்டோர் நிறுவனத்திற்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது நான்கு நாட்கள் நீடித்தது. சோதனையின் முடிவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், அந்த பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதன் மொத்த மதிப்பு விவரத்தை வருமான வரித்துறை தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், 10 கோடி பணமும், 6 கோடி தங்க நகை கட்டிகள், கணக்கில் காட்டாத 150 கோடி மதிப்புள்ள ஜவுளி நகைகள், வாடகை ரசீது, பழைய பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த 7 கோடி ஆகியவை மறைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யமாக சரவணா ஸ்டோர் சட்டத்துக்கு புறம்பாக வருமானத்தை மறைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இதை வருமான வரித்துறை சட்ட பூர்வமாக அணுகும் பட்சத்தில் இந்த குற்றத்திற்கு சிறை தண்டனை கூட வழங்கும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்காக மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை செய்து வைத்துள்ளது. வரிஏய்ப்பு, வருமானத்தை மறைப்பது என்பது சட்டவிரோதம், நேரடி வரி வருவாய் குறைந்ததை தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் அதை சீராமைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஏரி ஏய்ப்பு , வருமானத்தை குறைத்து காட்டுவது போன்றவற்றை கண்டுபிடிப்பதில் சமீப காலமாக அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போதெல்லாம் சிறிய தவறு நடந்தாலும் அதிகாரிகள் விட்டுவைப்பதில்லை என்ற நிலையே இருந்து வருகிறது. வரியேய்ப்புசெய்தவர்களுக்கு உடனே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது அவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பது என அடுத்தடுத்த ஆக்ஷனில் இறங்கி விடுகின்றனர். இதுபோல வரிஏய்ப்பு ஈடுபடுபவர்களுக்கு 276 பி யின் படி ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பி அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் வேண்டுமென்றே வருமான வரி ஏய்ப்பு செய்தால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என்று விதிகள் உள்ளது. பிரிவு 276c யில் அப்படி ரூபாய் 25 லட்சத்துக்கு மேல் வரியேய்ப்பு செய்யப்பட்டதால் அந்த நபருக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம் என சட்டம் வழிவகை செய்கிறது. 25 லட்சம் இதை விட குறைவாக வரியேய்ப்பு செய்யப்பட்டிருந்தால் 3 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அதனுடன் அபராத தொகையும் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வருமான வரித் துறையைப் பொருத்தவரையில் இதுவரையில் எவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக பதிவாக வில்லை. இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலானோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஏற்ப அபராத தொகை செலுத்தி விட்டு வழக்கில் இருந்து விடுபடுவதே வாடிக்கையாக உள்ளது. தொகையை செலுத்திவிட்டு தங்கள் மீதான பிணக்கை தீர்த்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சரவணா செல்வரத்தினம் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார். பின்னர் மறைக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்படும், அவர்கள் அதை செலுத்த ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்வதுடன், இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்யக் கூடாது என வரிமான வரித்துறை சார்பில் எச்சரிக்கைபடும், ஆனால் தொகையை செலுத்த மறுக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகார்கள் நாம் மேற்றகண்ட சட்ட வதிகளின் படி சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என வருமான வரித்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.