சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் இன்று சற்றுமுன்னர் விஜயா ஹெல்த்செண்டர் மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 72.

கடந்த 2001-ம் ஆண்டு ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைக் கூலிப்படை வைத்து கொலை செய்ததாகப் புகார் எழுந்தது. சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை மறுமணம் செய்வதற்காக இந்தக் கொலை நடந்தது. மேலும், கொடைக்கானல் அருகே சாந்தகுமாரின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால், 3 வருடங்களுக்குப் பிறகே இந்தக் கொலையில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். 10 வருடங்களாக நடந்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜாமீனில் உள்ள ராஜகோபால் ஜூலை 7-ம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது

இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு நீதிபதிகள் பானுமதி, பி.கே.மிஷ்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பில், ``இந்தியத் தண்டனைச் சட்டம் 302-ன்படி இந்தக் கொலைக்குற்றத்துக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜோதிடரின் அறிவுரைப்படி 20 வயது இளம்பெண் ஜீவஜோதியை திருமணம் செய்தால் ஹோட்டல் வியாபாரம் பெருகும் என்ற எண்ணத்தில் அவரை மூன்றாம் திருமணம் புரிய ராஜகோபால் முயன்றுள்ளார். அதற்குத் தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் கடத்திச் சென்று கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு இந்தக் கொலை பயங்கரமான முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் அவரது மோசமான உடல்நிலையைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி கேட்டபோது வலுக்கட்டாயமாக அவர் சிறையிலடைக்கப்பட உத்தரவிடப்பட்டார். இரு தினங்களுக்கு முன் நீதிமன்ற அனுமதியின்படி சென்னை விஜயா ஹெல்த் செண்டரில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்றுமுன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.