sarathkumar asking help from tamilisai
ஆர்.கே.நகர் தேர்தல் நெருக்கடி, விஜயபாஸ்கர் வடிவத்தில், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலரையும் தூங்க விடாமல் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில், விசாரணைக்காக ஆஜரான சரத்குமாரிடம், அதிகாரிகள் கேட்ட முதல் கேள்வியே, அவரை மிகவும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
சரத்குமாரிடம் விசாரணை செய்த அதிகாரிகள், பண பரிவர்த்தனை விஷயத்தை மட்டுமே பேசாமல், அடிக்கடி நிறம் மாறும், அரசியல் நிலைப்பாடு பற்றி கேட்டும் அவரை மிகவும் நோகடித்துள்ளனர்.

ஜனவரி மாதம் சசிகலாவுக்கு ஆதரவு, பிப்ரவரியில் பன்னீருக்கு ஆதரவு, மார்ச்சில் தனித்துப் போட்டி, கடைசியாக தினகரனுக்கு ஆதரவு என அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றியதற்கு என்ன காரணம் என்று சரத்குமாரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து பதில் சொல்லி ஒரு வழியாக சமாளிக்க முயற்சித்துள்ளார் சரத்குமார். ஆனால் இங்கு சினிமா எடுக்கவில்லை. எல்லா விஷயமும் எங்களுக்கு தெரியும் என்று முகத்தில் அடித்தாற்போல் அதிகாரிகள் பேசியுள்ளனர்.
மேலும், நீங்கள் என்ன வாங்கினீர்கள்? எப்படி வாங்கினீர்கள், என்பதற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. எனவே, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுங்கள் என்றும் கூறி உள்ளனர்.

அத்துடன், எங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உண்மையை சொல்லிவிட்டால், உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் இல்லை என்றால் சிக்கல்தான் என்றும் எச்சரித்துள்ளனர்.
அடுத்து தினகரனிடம் வாங்கிய 5 கோடியும்,, முதல்வர் பழனிச்சாமியிடம் வாங்கிய 2 கோடியும் எங்கே? அதை மட்டும் சொல்லுங்கள், என்று வருமான வரித்துறையினர் நெருக்கியுள்ளனர்.
அதனால், 5 கோடி ராடான் நிறுவனத்தில் வந்த லாபம் என்றும், இரண்டு கோடி சினிமா நண்பர் ஒருவரிடம் வாங்கிய கடன் என்றும் ஒரு தயாரிப்பாளர் பெயரை சொல்லியிருக்கிறார்.
அத்துடன் சரத்குமாரை அனுப்பிவிட்டு, நேற்று காலை ராதிகாவின் நிறுவனமான ரேடான் டி.வி.யில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

இதனால் பயங்கர அப்செட் ஆன ராதிகா, ’என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டீர்கள் என்று சரத்குமாரை கடுமையான வார்த்தைகளால் திட்டி பேயாடி இருக்கிறார்.
இதை எப்படி சமாளிப்பது? என்று யோசித்த சரத்குமாருக்கு, நாடார் சமூகத்தை சேர்ந்த சிலர், தமிழிசையை பார்க்க சொல்லி ஐடியா கொடுத்துள்ளனர்.
அதை ஏற்று, சரத்குமாரின் ஆதரவாளர் ஒருவர் தமிழிசை வீட்டின் கதவை தட்டி இருக்கிறார். ஆனால் இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்திருக்கிறார் தமிழிசை.

இப்போதைக்கு அவரை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லுங்கள், கொஞ்ச நாட்கள் கழித்து ஏதாவது செய்யலாம் என்றும் அவர் அட்வைஸ் செய்துள்ளார்.
தற்போது இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர மீண்டும் அணிமாறலாமா? என்று சரத்குமார் யோசித்து வருவதாக தகவல்.
