அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் தமிழக அரசு இயந்திரம் இயங்கவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள ஜெயலலிதா, விரைவில் குணம் பெற வேண்டி பல்வேறு தரப்பினர் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தியும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், மண்சோறு சாப்பிட்டும், அங்க பிரதட்சணம் செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த தலைவர்கள், மருத்துவமனை சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதுவை மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர், கேரள மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர், தமிழக எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் மருத்துவமனை சென்று வருகின்றனர். அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்துகுமார், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து மூத்த அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன்.

மீண்டும் ஒரு வாரத்துக்கு முன்பு சென்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஆனால், சிலர் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் தமிழக அரசு இயந்திரம் இயங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. உடல் நலம் பாதிக்கப்படுவது அனைவருக்கும் இயல்பானது. தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விரைவில்
வீடு திரும்புவார்".

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.