தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. பிரச்சாரம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால், அனைத்து கட்சியினரும், பரபரப்புன வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேற்கண்ட தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு அனலாய் பறக்கிறது.

அதிமுக சார்பில் அமைச்சர்கள், நிர்வாகிகள் அந்தந்த தொகுதியில் முகாமிட்டுள்ளனர். அனைவரும் திறந்தவெளி ஜீப்பிலும், வீடு வீடாக நடந்து சென்றும் வாக்காளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்காக நேற்று, அந்த தொகுதி முழுவதும் திறந்தவெளி வாகனத்தில், கொளுத்தும் வெயிலில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது, உயர்க்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்..
