’தமிழக மக்களிடமிருந்து கொள்ளை அடித்த கோடிக்கணக்கான ஊழல் பணத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே அ.தி.மு.க.அமைச்சர்கள் பிரதமர் மோடியை டாடி என்று அழைக்கின்றனர்’ என்று வெளுத்து வாங்குகிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத்.

முன்னாள் முதல்வர் அம்மா தற்போது தங்களுடன் இல்லாத நிலையில் பிரதமர் மோடிதான் இப்போதைக்கு எங்களுக்கு டாடி என்று ஓரிரு தினங்களுக்கு முன்பு பால்மனம் மாறாத பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியிருந்தார். அ.தி.மு.க.வினர் பலரையே அந்தப் பேச்சு நெளிய வைத்திருந்தது. ஆனாலும் துக்கம் தொண்டையை அடைக்க மவுனம் காத்து வந்தனர்.

 இந்நிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத், ’’வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதி.  நாகர்கோவிலில் வரும் 13ம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் மோடியை தமிழக அதிமுக அமைச்சர்கள் டாடி என்கின்றனர். தமிழக மக்களிடமிருந்து கொள்ளை அடித்த கோடிக்கணக்கான ஊழல் பணத்தையெல்லாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுதான் அதிமுக அமைச்சர்களின் ஒரே எண்ணம். அந்த ஊழல் பணத்தைக் காப்பாற்றுவதற்காகவே, மோடியை இவர்கள் டாடி என்று சொல்லுகின்றனர்’ என்றார்.