உ.பியில் முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகங்களும் காவி மயமாகிறது.

உத்தரப்பிரதேசத்தை காவி நிறமாக்குவதில் முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

காவி மயம்

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள தலைமைச் செயலக இணைக் கட்டிடமான லால் பகதூர் சாஸ்திரி பவனில் முதல்-அமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் அங்கு உயர் அரசு அதிகாரிகளின் வீடுகளும் உள்ளன. இந்நிலையில் அந்த கட்டடங்களுக்கு பா.ஜ.க. வை அடையாளப்படுத்தும் வகையில் காவி நிறம் அடிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளை நிறம் அகற்றம்

உ.பி. மாநில அரசின் தலைமைச்செயலர் குடியிருக்கும் கட்டடமும் அந்த வளாகத்தில் தான் உள்ளது. வழக்கமாக இந்த கட்டடங்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் காணப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது திடீரென பாரம்பரியமான வெள்ளை நிறம் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிறம் அடிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்துகள்

சமீபத்தில் முதலமைச்சர் ஆதித்யநாத் தொடங்கிவைத்த 50 அரசு பேருந்துகளுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டிருந்தது. அந்த விழா மேடையும் காவி நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பள்ளி பைகளும் காவி நிறத்திலேயே வழங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அரசு அலுவலகங்களும் காவிக்கு மாறி வருகின்றன.

அரசியல் கட்சிகள் கண்டனம்

உ.பி. அரசின் இந்த நடவடிக்கைக்கு சமாஜ்வாதி கட்சி , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தொடர்புள்ள நிறத்தை அரசு அலுவலகங்களுக்கு பூசுவது சரியான நடவடிக்கை அல்ல என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திவிஜேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.