தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகிளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, ஒட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்களர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மா ஆசியுடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதால் தற்போது இங்கு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாவுக்கு துரோகம்  செய்தவர்களுக்கு நாம் சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

ஸ்டாலினைப் பொறுத்தவரை அரசின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்கிறார். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன சாதனை செய்தார்கள் என்று கூற முடியுமா ?  என கேள்வி எழுப்பினார்.

பெரம்பலூர் சாதிக் பாட்சாவின் நிறுவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 2 ஜி ஊழலில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் மாம்மான முறையில் மரணமடைந்தார். ஆனால் அந்த வழக்கை தற்கொலை என்று அன்றைய திமுக ஆட்சி மூடி மறைத்துவிட்டது.

இதே போல் ஸ்டாலின் நெருங்கிய நண்பர் அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் மர்மமான முறையில் இறந்து போனார். அந்த வழக்கும் தற்கொலை வழக்கு என இழுத்து மூடப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் யாராவது புகார் அளித்தால் , திமுகவினர் மீதும் ஸ்டாலின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

திமுகவினர் மீதுள்ள நீண்ட நாள் வழக்கை தற்போது எடப்பாடி தூசு தட்டி எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.