சாதிக் பாட்சா மனைவி தனது காரை தாக்கி தன்னை கொல்ல முயற்சி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தனது கார் மீது தாக்குதல் நடத்தியது திமுக தரப்பினராக இருக்கலாம் என அவர் சந்தேகப்படுவதாக ரெஹானா பானு தரப்பினர் கூறுகின்றனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அந்த சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் சாதிக் பாட்சா மனைவி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி இருக்கிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மரண பயத்துடன் பேசியபோது, ‘’நேற்று இரவு அசோக் நகரில் இருந்து துரைப்பாக்கம் வந்து கொண்டிருந்தேன். துரைப்பாக்கம் சிக்னலுக்கு முன் எனது காரை அடித்து நொறுக்கினார்கள். நான் போய்க் கொண்டிருந்த காரை நேற்று யாரோ அடித்து நொறுக்கினார்கள். அது குறித்து கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தோம். அதை ஏற்றுக்கொண்டு கமிஷனர் பாதுகாப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார். எனது கணவரது நினைவஞ்சலி விளம்பரம் வெளியிட்டதற்கு பிறகு இது நடந்ததால் எனக்கு பயமாக இருக்கிறது. 

நாங்கள் காரை நிறுத்தவே இல்லை அடித்து நிறுக்கியதும் நாங்கள் வேகமாக கிளம்பி விட்டோம். எனக்கு ரொம்ப பயமாக இருப்பதால் இப்போதைக்கு எதையும் பேச விருப்பவில்லை. அப்புறம் பேசுறேன். ஏற்கெனவே மிரட்டல்கள் வந்திருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் பாதுகாப்பு அளித்தனர். இந்த நிலையில் நானும் எனது தம்பியும் வரும்போது காரை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்’’ என அவர் தெரிவித்தார். 

2ஜி ஊழல் வழக்கில் ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மாள், தங்கை கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதில் கனிமொழி, ஆ.ராசா இருவரும் திஹார் சிறைவாசம் அனுபவித்தனர். பின்னர் 2ஜி வழக்கில் யாருமே குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை பாஜக தூசு தட்டி சாதிக் பாட்சா மனைவியை அப்ரூவர் ஆக்கலாம் என பாஜக திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரெஹானா பானு தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாதுகாப்பு கேட்டு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விளம்பரம் வெளியிட்ட பிறகே இந்தத் தாக்குதல் நடைபெற்ற தால் நடுக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.  அந்த விளம்பரத்தில் ’’கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே.. உன் அன்பு முகம் கூட அறிந்திடா உள் பிள்ளைகள்’’ என வாசகங்கள் அடங்கி இருந்தது. இது சாதிக் பாட்சாவின் நண்பராக இருந்த திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை குறிப்பிட்டு எழுதப்பட்ட வாசகங்கள் என திமுக தரப்பு கொதித்துக் கிடக்கிடக்கிறது. ஆக, இந்த விளம்பரம் வெளியானதால் கோபமான திமுக தரப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என ரெஹானா பானு தரப்பினர் கூறுகின்றனர்.