அயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முஸ்லிம் அமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த10-ம் தேதி கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் , அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்கிறார்கள். அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். 

ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் ஆதரவு மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது எதிரொலிக்கும் என சச்சின் பைலட் தெரிவித்தார்..