ஆகப்பெரிய ஜனநாயக தேசம்! என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில்தான் அதிகார வர்கத்தின் பூட்ஸ் கால்களால், சாமான்யன் மற்றும் அரசு ஊழியர்களின் கருத்துக் குரல்வளை அமுக்கி நெரிக்கப்படுகிறது காலங்காலமாக. அமைச்சரின் செருப்பை அதிகாரி துடைத்துவிடுவதும், அதிகாரியின் பாலியல் வெறிக்கு சிவிலியன் பெண் பலிகடாவாவதும் இதே சமதர்ம தேசத்தில்தான். ஆனால் கடந்த சிலநாட்களாக, அமைச்சரின் முன்னே அடங்கிப் போகணும், அதிகாரியின் முன்னே அமுங்கிப் போகணும்! என்கிற கட்டுப்பாடுகள் உடைபட்டு சிதைபடுவதை பார்க்கும்போது ஜீவன் இழந்துவிட்ட ஜனநாயகத்துக்கு யாரோ குளுகோஸ் கொடுத்து உயிர்ப்பிப்பது போன்றதொரு நம்பிக்கை கிளம்புகிறது. 

காட்சி 1: கஜா புயலால் கதறக் கதற சூறையாடப்பட்டுவிட்ட நாகை மாவட்டத்தில், பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மக்களின் எதிர்ப்பால் ஒரு பைக்கில் அமர்ந்து தப்பிச் சென்றார். இது,  திகட்ட திகட்ட தேசம் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ. அந்த சம்பவத்தில், அமைச்சரின் பைக்கை சேஸ் செய்து வருகிறார் ஒரு இளைஞர். ஒரு கட்டத்தில் இரண்டு தரப்புமே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வார்த்தை மோதல்களில் ஈடுபடுகிறது.

 

இரு தரப்புமே சூடான, மரியாதை மீறிய வார்த்தைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. ‘ஆளும் அமைச்சர்’ என்றும் பாராமல் இந்த காட்சிகளையெல்லாம் விரட்டி விரட்டி வீடியோ எடுத்திருக்கிறார் ஒரு நபர். நாளை தங்களுக்கு சிக்கல்கள் நேரலாம்! என்று சண்டையிடும் நபரும் பயப்படவில்லை, வீடியோ நபரும் அஞ்சவில்லை. வெகு தைரியமாக அதிகார வர்க்கத்துக்கு சவால் விட்டுள்ளனர். இது ஆச்சரியப்படுத்துகிறது. 

அதேபோல், தேசத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு சென்றார். அப்போது, நிலக்கல் பகுதியில் கேரள காவல்துறையினருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அமைச்சரின் காரை அனுமதிக்க முடியாது என்றனர் போலீஸார், ஆனால் அமைச்சரோடு இருந்தவர்கள், ‘அரசு பேருந்து செல்கிறது. ஆனால் அமைச்சர் வாகனம் செல்லாதா?’ என்றனர். 

உடனே எஸ்.பி., யதீஷ் சந்திரா “அரசு பஸ் பம்பையில் மக்களை இறக்கிவிட்டுவிட்டு வந்துவிடும். அங்கே நிற்காது. ஆனால் அமைச்சர் செல்லும் காரோ, அவர் தரிசனம் முடிந்து திரும்பி வரும் வரை அங்கேயே நிற்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உருவாகும். அமைச்சர் கார் செல்ல வேண்டுமென்று நினைத்தால், அனைத்து வாகனங்களும் செல்லலாம்! என்று அவரை உத்தரவிட சொல்லுங்கள்.” என்று பந்தை வெகு அநாயசமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பக்கம் தள்ளிவிட்டார். 

வேறு வழியின்றி அரசு பஸ்ஸில் சென்ற பொன்னார், ஐயப்பன் சந்நிதிக்கு ஆதங்கத்துடனே சென்றார். மூலவர் சந்நிதி முன் நின்று குலுங்கி அழுதேவிட்டார். ஒரு மத்தியமைச்சரையே போலீஸ் அதிகாரி அழ விட்ட சம்பவம் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஒரு மத்தியமைச்சர் என்றெல்லாம் பயப்படாமல், தன் அதிகாரத்துக்கான தோரணையை காட்டியிருக்கும் அந்த போலீஸ் அதிகாரியும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதிகார மையங்களைக் கண்டு சிவிலியன்களும், அரசு ஊழியர்களும் அஞ்ச வேண்டும் எனும் மரபு ஆரோக்கியமானதே. ஆனால் இதை ’மாவோயிஸ சிந்தனை’ என்று முளையிலேயே நசுக்கிட நினைப்பார்கள் கரைவேஷ்டி கணவான்கள். கவனம் அவசியம்!