பாஜகவில் அண்மையில் நடிகை குஷ்பு சேர்ந்தார். இதனையடுத்து பல  நடிகர், நடிகைகள் பாஜகவில் சேரப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றன. நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. இ ந் நிலையில் இத்தகவலை எஸ்.ஏ. சந்திரசேகர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
 அதில், “நான் பாஜகவில் சேரப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று தனியாக ஓர்  அமைப்பு உள்ளது. அதை வலுப்படுத்துவதில்தான் எனது கவனம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படுகிறபோது அரசியல் கட்சியாக மாறும். நாமாக அரசியலுக்கு வருவதைவிட மக்கள் அழைத்து அரசியலுக்கு வரும்போது சக்தி வாய்ந்ததாக இருக்கும். மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார்.  பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.