டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று பேசியதாவது:

" அரசின் கொள்கை முடிவுகள் தவறாக இருந்தால் அதை விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதை ஆட்சியாளர்கள் அடக்கினால், அந்த தவறுகள் இன்னும் அதிகமாகும். ஆட்சியில் இருப்பவர்கள் மீதுவிமர்சனங்கள் எழுந்தால் அதை அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள்தான், அரசின் கொள்கையில் ஏற்படும் தவறுகளை திருத்தும்.

எந்த ஒரு கொள்கையை விமர்சித்த உடன் அரசு அதிகாரியிடம் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் வந்து விமர்சனத்தை திரும்பப்பெறுங்கள் என்று வந்தாலும், அல்லது ஆளும் ஆட்சியாளர்களின் சமூகவலைதள ட்ரால் படை, போன்றவை விமர்சனத்தை அடக்கி ஒடுக்கவே செய்யும்.

அனைத்தும் இதமான சூழலில் இருக்கிறது, ஆட்சி நடக்கிறது என்று அரசு நம்புவைக்கிறது, ஆனால், நீண்டகாலத்துக்கு கடினமான உண்மைகளை மறைத்துவிட முடியாது.


சிலநேரங்களில் சந்தேகமில்லாமல் சில விமர்சனங்கள் அதாவது பத்திரிகையில் தவறான தகவல்கள் அடிப்படையில், தனிப்பட்ட ரீதியான தாக்குதல்கள் வரக்கூடும். நான் பணியில் இருந்தபோது எனக்கும் கூட அந்த அனுபவம் இருந்திருக்கிறது. வெளிப்படையாக வரும் விமர்னங்களை அரசு அடக்குவது என்பது, அவர்களே அவர்களுக்கு செய்யும் மோசமான சேவையாகும்” என ரகுராம் ராஜன் தெரிவி்த்தார்