பாஜக அரசு முன்பை விட மூர்க்கத்தனத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நம்முடைய பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் வகையில் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
டி.ராஜா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக் கூட்டம் ஜனவரி 26 முதல் 28-ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு அக்டோபரில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக, தற்போது நாட்டு மக்களை மதம், மொழி, சாதி, கலாச்சாரம் ரீதியாகப் பிளவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. 
கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயிற்சி முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. வன்முறையைப் போதிக்கிற பாசறையாக இந்தப் பயிற்சி முகாம்கள் உள்ளன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டு, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது. கார்ப்பரேட்டுகளிடம்தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். பாஜக அரசு முன்பை விட மூர்க்கத்தனத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நம்முடைய பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் வகையில் உள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உச்ச நிலையில் உள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. மாநிலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் மற்றும் திட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு குறித்து முன்பே பேசியுள்ளோம். இரு கட்சிகளும் இணைந்தால் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும். சீனா பான்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, பிரதமரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று டி.ராஜா கூறினார்.
