சுயாட்சி விவகாரமும், அதற்கு மத்திய அரசின் காட்டமான ரியாக்‌ஷனும் பொதுவாக தமிழகத்தை மையப்படுத்திதான் உருவாகும். ஆனால் கடந்த சில நாட்களாக காஷ்மீரை இந்த விவகாரம் ‘வெச்சு செய்து கொண்டிருக்கிறது’ என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள். 

அதன் அதிர்வு திருப்பமாக சமீபத்தில் பரூக் அப்துல்லா பேசியிருக்கும் பரபரப்பு பேச்சை சுட்டிக் காட்டுகிறார்கள். 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா சமீபத்தில் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் . அப்போது “நாமும், நம் கருத்துக்களும் இரும்புச் சட்டங்களுக்கு பின்னர் இருப்பதாகவே தோண்றுகிறது. இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினாலே நம்மை துரோகிகள் மற்றும் தேச விரோதிகள் என முத்திரை குத்துகிறார்கள். 

நாங்கள் உங்களை (இந்தியாவை) அன்புடன் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்களோ எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எங்களிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்கிறீர்கள். 

இத்தனையும் செய்து விட்டு ‘எங்களை ஏன் தழுவ மறுக்கிறீர்கள்?’ என்று எங்களிடமே கேட்கிறீர்கள். எங்கள் மக்களின் இதயங்களை வெற்றி கொள்ள முயற்சிக்கும் வரை  ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியன உங்களை தழுவாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

எங்களது இதயங்களை வெற்றி கொள்ள வேண்டுமானால் எங்கள் சுயாட்சியை எங்களிடம் திருப்பித் தாருங்கள்.” என்று நெற்றியிலடித்தாற் போல் பேசியிருக்கிறார். 
பரூக்கின் இந்த பேச்சு காஷ்மீருக்கான சுயாட்சி நகர்வுகளில் ஒரு முக்கிய நிலையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதோடு, பி.ஜே.பி.யை அதிருப்தி கொள்ளவும் வைத்திருக்கிறது. 

இந்த நிலையில் ப.சிதம்பரமும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின்படி அதிகபட்ச சுயாட்சியை விரும்பவதாக கூறிய விவகாரமும் சேர்ந்து கொண்டது. 

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் பேசிய மோடி ‘காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளும், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளும் பேசுவதை போல் காங்கிரஸ் தலைவர்களும் வெட்கம் இல்லாமல் பேசுகிறார்கள். இது நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிப்பது போல் இருக்கிறது.” என்று வெடியாய் வெடித்துவிட்டார். 

ஆக மொத்தத்தில் இந்த விவகாரம் எப்போது, எப்படி அடங்குமென்று புரியவில்லை.