இடதுசாரிக் கட்சிகளுக்கு ரூ.25 கோடி கொடுக்கப்பட்டது தொடர்பான கேள்வியால் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டியது பரபரப்பாகியுள்ளது.

சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மேலும் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதன் பிறகு வில்லிவாக்கம் பகுதியில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேர்தல் சமயத்தில் திமுக தரப்பில் இருந்து இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இடதுசாரிக்கட்சிகளுக்கு ரூ.25 கோடி கொடுக்கப்பட்டது ஏன் என்று பிரேமலதா மற்றும் சில கட்சிகள் கேட்பதாக பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வியை ஆரம்பித்தார். ஆனால் அந்த கேள்வி முடிவதற்கு உள்ளாகவே, பணம் கொடுத்ததற்கான காரணத்தை வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தான் திமுக சொல்ல வேண்டும் என்றும் அதனை திமுக செய்துவிட்டதாக கூறினார்.

மேலும் எதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்பதை உங்களுக்கோ, பிரேமலதாவுக்கோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்டாலின் கூறியதால் செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு இப்படி பணம் கொடுப்பது என்பது தமிழகத்திற்கு முதல் முறை. அதுவும் தேர்தல் சமயத்தில் சுமார் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

மேலும் திமுக என்பது ஒரு அரசியல் கட்சி இடதுசாரிகளும் அரசியல் கட்சிகள். இந்த விவகாரத்தில் இடதுசாரிகள் பொறுப்பான முறையில் பதில் அளித்து வருகின்றன. ஆனால் ஸ்டாலின் இப்படி ஒரு கேள்வியே கேட்க கூடாது என்கிற ரீதியில் அளித்துள்ள பதில் அவர் எதையோ பதற்றத்துடன் மறைப்பதை காட்டுவதாக செய்தியாளர்கள் கிசுகிசுத்தனர். மேலும் ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு எதற்காக 25 கோடி கொடுத்தது என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளதையும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.