காங்கிரஸ் கட்சியில் முக்கிய புள்ளியாக வலம் வந்த ராயபுரம் மனோ விரைவில் திமுகவில் இணைய உள்ளார்.

திமுகவில் தற்போது வட சென்னையின் அடையாளமாக இருப்பவர் சேகர் பாபு. துவக்கத்தில் சேகர் பாபு என்றால் அதிரடி தான். ஆனால் தற்போது அமைதி மற்றும் ஆன்மிகப்பாதையில் சேகர் பாபு தீவிரம் காட்டி வருகிறார். ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு நெருக்கமாக இருக்கும் சேகர்பாபு வட சென்னையில் திமுக வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு புகார் உண்டு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு டெபாசிட்டே பறிபோனது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் நினைவில் இருக்காது. ஒரு காலத்தில் ஆர்.கே.நகரில் சேகர்பாபு மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தவர். ஆனால் அங்கு ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட மறுத்துவிட்டார். மேலும் வட சென்னை பகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தனை மீறி சேகர் பாபு பெரிய அளவில் லோக்கல் பாலிடிக்ஸ் செய்வதில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் காங்கிரசில் இருந்து ராயபுரம் மனோ விலகியுள்ளார். மனோ காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தேர்தல் சமயங்களில் ஜெயக்குமார் உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். தற்போதும் கூட ஜெயக்குமாருக்கு எதிராக  ராயபுரம் பகுதியில் மனோ, தீவிரமாகவே பணியாற்றி வந்தார். ஆனால் காங்கிரசில் உரிய மரியாதை இல்லை என்பதால் அங்கிருந்து விலகிவிட்டார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே திமுகவுடன் மனோ பேசிவிட்டதாக சொல்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலில் எம்எல்ஏ சீட் என்கிற நிபந்தனையுடன் விரைவில் அவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். மனோ வந்த பிறகு வட சென்னை மாவட்ட திமுகவில் மாற்றங்கள் வரும் என்கிறார்கள்.