Rowdies arrested in chennai.continued the arrest action
சென்னை மலையம்பாக்கத்தில் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்ட 75 ரௌடிகளில் பெரும்பாலோனோரை அரசியல்வாதிகளே உருவாக்கிவிட்டதாகவும், அவர்களின் அரவணைப்பில்தான் பல குற்றச் செயல்களில் ரௌடிகள் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ரௌடிகளைப் பிடிக்க போலீசார் துப்பாக்கியுடன் கிளம்பியுள்ளனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளி பரிவாரங்களோடு மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரியஅளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, ஒரேநேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.
ரவுடி பல்லு மதன் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேனாம்பேட்டை போலீசார் அவரை தற்போது கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரவுடி பல்லு மதனிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். வடக்கு மலையம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்ந்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

ரவுடி பல்லு மதனுக்கு தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் அரசியல் பிரமுகர் ஒருவர் பின்னணியில் உள்ளாராம். அவர் சொல்லும் வேலைகளைச் செய்யும் ரவுடி பல்லு மதன் அவரிடம் மாதந்தோறும் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறாராம்.
இதே போல் ரவுடி பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். அவரது முதல் மனைவி இறந்துபோனார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார். கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தப்பியோடிய ரௌடிகளை பிடிக்க சென்னை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஸ்டீபன் தலைமையில் ரவுடி ஒழிப்பு போலீஸ்படை செயல்படுகிறது. அந்த போலீஸ்படையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 இதர போலீசார் இடம்பெற்றுள்ளனர்.

போலீசாரிடம் உள்ள ரௌடிகளின் பட்டியலில் தற்போது 250 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியில் தலைமறைவாக சுற்றும் மீதியுள்ள 678 ரவுடிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர்.
சி.டி. மணி உள்ளிட்ட பல ரௌடிகள் கைகளில் துப்பாக்கி வைத்திருப்பதால் அவர்களை கைது செய்யச் செல்லும்போது தனிப்படை போலீசார் துப்பாக்கியோடு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரௌடிக்கும்பலை வேட்டையாட துப்பாக்கியுடன் களமிறங்கியுள்ளனர் தனிப்படை போலீசார்.
