r.k.nagar bye election


ஆர்,கே.நகர். இடைத் தேர்தல்… நாளை தொடங்குகிறது வேட்பு மனுத் தாக்கல்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தற்போது இங்கு திமுக, அதிமுக,ஓபிஎஸ் அணி என பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெரும்பாலும் தமிழகத்தில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது.

இது தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இடைத் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்துள்ளார்.


ஏற்கனவே தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நலக்கூட்டணி, என் தேசம் என் உரிமை ஆகிய கட்சிகளும் போட்டியிட இருப்பதால் ஆர்.கே.நகரில் பல முனைப்போட்டி உருவாகியுள்ளது.


இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாதேவியின் தண்டையார்பேட்டை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.