r.k.nagar by election will be held with dec 31 ...high court order
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணைத்துக்கு கெடு விதித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக அம்மா அணி சார்பில், டிடிவி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷூம், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்ததையடுத்து, ஏப்ரல் 10ம் தேதி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையில் தேர்தல் நடத்தப்படாததால், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருது கணேஷும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்பெஞ்ச்சில் இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் முறையிட்டார்.

இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால்தான், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், ஆர் கே நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் குறித்த விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என உத்தரவாதம் அளித்தது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 31 ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என்றும் உயர்நிதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
