ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற தினகரனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், கை கொடுக்கவும் ஏராளமான பெண்கள் முண்டியடித்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தொகுதிக்கு செல்வதால், தொகுதி மக்கள் தன் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு தினகரன் தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர்களின் அதிருப்தியை போக்க ஆர்.கே.நகரைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச தையல் மிஷின் கொடுத்து அசத்திவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் தினகரன். இதனை அடுத்து சுமார் 100 பெண்களுக்கு தையல் மெசின் கொடுக்க ஏற்பாடு நடைபெற்றது.

தையல் மிசின் பெறும் பெண்கள் நிச்சயமாக கட்சியில் இருக்க கூடாது, கட்சிக்காரரின் மனைவியாகவும் இருக்க கூடாது என்கிற நிபந்தனையில் 100 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் ஆர்.கே.நகரில் சந்து பொந்துக்கு எல்லாம் சென்று தேவை இருக்க கூடிய 100 பெண்களை தேர்வு செய்தனர். மேலும் அவர்களுக்கு நிச்சயமாக தையல் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தேடிக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக தையல் மிஷின் கொடுப்பதற்கு 100 பெண்களை தேர்வு செய்து அவர்களை எம்.எல்.ஏ அலுவலகத்திற்கும் அழைத்து வந்துவிட்டனர். ஆனால் ஆர்.கே.நகரில் தினகரன் நுழைய எதிர்ப்பு தெரிவித்து மதுசூதனன் கோஷ்டி செய்த ரகளையால் நிகழ்ச்சி தொடங்க தாமதம் ஆனது. நீண்ட இழுபறிக்கு பிறகு வந்த தினகரன் முதலில் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் பெண்களை சந்தித்து அவர்களுக்கு தையல் மெஷின்களை வழங்கினார்.

அப்போது தினகரனே எதிர்பார்க்காத வகையில் தையல் மெஷின் பெற்ற பெண்கள் தினகரனை நோக்கி முண்டியடித்தனர். இதனால் சற்று அதிர்ந்து போன தினகரன் அவர்களை ஆசுவாசப்படுத்தி ஒவ்வொருவருக்கும் கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது சில பெண்கள் தினகரனுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்றனர். அதற்கும் ஆர்வத்துடன் அவர்களுடன் நின்று தினகரன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

தினகரனுடன் பெண்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வதை பார்த்து அவரது ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளும் உண்மையிலேயே குஜாலாகிப்போயினர் என்று தான் சொல்ல வேண்டும்.