Retired Judge Arumugamasi has ordered two government doctors to be present at the inquiry tomorrow on the death of Jayalalithaa.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்குழுவில் இரண்டு அரசு மருத்துவர்கள் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரை பார்க்க சசிகலாவும் அப்போலோ மருத்துவர்களும் யாரையையும் அனுமதிக்கவில்லை. 

இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதைதொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஜெயலலிதா நலமாக இருப்பதாக பேட்டியளித்தனர். 

இந்நிலையில், திடீரென ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி டிசம்பர் 5 ல் வெளியானது. அந்த நிமிடம் அனைவருக்கும் ரமணா பட காட்சிகளே கண்முன்னே வந்து வந்து சென்றது. 

இதையடுத்து அதிமுக இரு அணியாக பிரிந்தது. ஒபிஎஸ் தனி அணியாக உருவெடுத்தார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணை கமிஷன் அமைக்கவும் ஒபிஎஸ் வலியுறுத்தி வந்தார். 

இதைதொடர்ந்து இபிஎஸ் அணி டிடிவியை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்சுடன் கூட்டு சேர்வதற்காக விசாரணை கமிஷனை அமைத்தது. இதில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் பிரமாண பாத்திரங்களை தாக்கல் செய்யலாம் எனவும், முழுமையாக விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் ஆறுமுகசாமி உறுதிபட தெரிவித்தார். 

விசாரணை அறையில் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படாது எனவும் அப்பல்லோ மருத்துவமனை, போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.