தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது ஊழல் புகார் கூறி அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கராத்தே தியாகராஜன் அதிரடி புகார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ‘’ கே.எஸ்.அழகிரி மீது இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அழகிரி ஒரு கல்லூரி நடத்தி வருகிறார். மத்திய கடல் வழி கல்லூரிகளின் இணை ஆணையர் அவர்களது உத்தரவின் பேரில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6 மாதங்கள் நடத்த வேண்டிய ஒரு பாடத்தை 42 கோர்ஸ் நடத்தியதாக ஊழல் புகார் கொடுத்து இருக்கிறார்கள். கே.எஸ்.அழகிரி மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பெருந்தலைவர் காமராஜர் பேரில் ஒரு ட்ரஸ்டை நடத்திக் கொண்டு இருக்கும் அழகிரி மீது ஊழல் புகார் வந்துள்ளது. 

இந்த புகார் குறித்து உடனே அண்ணன் கே.எஸ்.அழகிரி தெளிவுபடுத்த வேண்டும். ஒண்ணுமே இல்லாத விவகாரத்தை சொல்லி எங்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்கினார்கள். இந்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி உடனே ராஜினாமா செய்ய வேண்டும். சோனியாகாந்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கராத்தே தியாகராஜன் அதிரடி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக, பேசியதாக தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்தது காங்கிரஸ் நிர்வாகம். இதற்கு பரிந்துரை செய்தது தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி. 

இதனையடுத்து கராத்தே மீது சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார் கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார். அதற்கு 10 கோடி விவகாரத்தை கூறி பதிலடி கொடுத்து இருந்தார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் கராத்தே தியாகராஜன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அதிரடியாக ஊழல் புகாரை தெரிவித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.