நாடாளுமன்ற மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்று உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர வைத்துள்ளது.

அதிமுகவில் தலைமைப் பொறுப்பை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு பெற்றுவிட்டது. இந்த தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற அடிப்படையில் வியூகம் அமைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் செயல்பட்டனர்‌. அதிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற புதிய வியூகம் வகுக்கப்பட்டு அதற்கேற்ப செலவுக்கான தொகையும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதவிர அதிமுகவினர் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் செலவுக்கு கணிசமான தொகையும் இறக்கப்பட்டது. கடந்த காலங்களில் தேர்தல் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகள் எப்படி செயல் பட்டனர் என்பதை அறிந்துகொள்ள உளவுத்துறையிடம் அறிக்கை கேட்பது ஜெயலலிதாவின் வழக்கம். அதே பாணியில் தற்போதும் எடப்பாடி பழனிசாமி உளவுத்துறையிடம் தேர்தல் நடவடிக்கைகளில் அதிமுகவினர் எப்படி செயல்பட்டனர் என்கிறார் அறிக்கையை கேட்டதாக கூறப்படுகிறது. 

வாக்குப்பதிவு முடிந்த அடுத்த கணமே அந்த அறிக்கையை உளவுத்துறை ஒப்படைத்துள்ளது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் கொடுக்கப்பட்ட தொகை முறையாக செலவிடப்பட்டுள்ளது என்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளிலும் மத்திய மாவட்டத்தில் இரண்டு மூன்று தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் கொடுத்த பணத்தை முறையாக செலவிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுகவினரின் பணி சிறப்பாக இருந்ததாகவும் அங்கு எந்த பிரச்சனையும் எழவில்லை என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி உள்ளிட்டோர் செலவுக்கான தொகையை கொடுத்த நிலையில் பெரும்பாலோனோர் அதனை முறையாக செலவிட்டுள்ளது எடப்பாடிக்கே அதிர்ச்சியாக இருந்தது என்று பேசிக்கொள்கிறார்கள்.