அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரையும், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இது குறித்து மேல்முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து தினகரன் தரப்பு தீவிர ஆலோசனை நடத்தியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, தினகரன் தரப்புக்கு பின்னடைவாக இருந்ததாக பார்க்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் எந்த நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், அறிவிப்புக்கு முன்னரே 20 தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்தது. இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், தங்களை தயார்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.