இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவிற்கு சீனா அனுப்பியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதித்தவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றை  கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. இந்நோய் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது ஒரு சவாலான ஒன்றாகும். 

இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளன.  இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள்  ஒன்றுக்கு 700 டெஸ்ட்கள் வரை மட்டுமே எடுக்க முடிகிறது. இதன் முடிவுகள் வெளிவர  காலதாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. சீனாவில், இந்த நோய் தொற்றை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்பட்டதால் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த கருவி மூலம்  பரிசோதனை செய்யும் போது மிக வேகமாக கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 

இந்நிலையில், இந்த கருவிகளை  தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார். ஆனால், இதுவரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரவில்லை. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை.  ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை என்று கூறினார். 

இந்நிலையில், இந்த கருவி இந்தியாவுக்கு இதுவரை வராததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வரவேண்டிய ரேபிட் டெஸ்ட்  கருவிகள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால், தமிழகம் முழுவதும் நோய் தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் தான் கிட்டுகள் திரும்ப கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும்.