ஹைதராபாத்தில் பெண் மருத்துவர்  பிரியங்கா ரெட்டி கடந்த மாதம்  4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய 4 குற்வாளிகளும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இவ்வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். 

மேலும் மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டனர். அதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிர்புர்கார், ஓய்வு பெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 6 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்குத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவான திஷா 2019 என்ற புதிய மசோதாவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகள் ஒருவாரத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வாரத்தில் அதாவது 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.