Asianet News TamilAsianet News Tamil

விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர்களை மறைப்பதா ? கொதித்தெழுந்த ராமதாஸ்...

சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த அண்ணா, காமராசர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ramdoss has demanded that the Chennai airport be named after Anna and Kamaraj
Author
Tamil Nadu, First Published May 7, 2022, 11:33 AM IST

விமான நிலையத்தில் தலைவர்கள் பெயர் அகற்றம்

சென்னை விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர் பலகையும் இல்லை, அறிவிப்பிலும் தலைவர்களின் பெயர்களை கூறுவதும் இல்லை, எனவே மீண்டும் அண்ணா, காமராசர் பெயர்களை சூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த  பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு  பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலையங்கள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் உணர்வு சார்ந்த விஷயத்தில்  இந்த அளவுக்கு தாமதமும், அலட்சியமும் காட்டப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியில் வி.பி.சிங் அவர்கள் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்ற போது, 1989-90 ஆம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டன. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு இந்த பெயர்களே அடையாளமாக மாறியிருந்த நிலையில், விமான நிலைய நவீனமயமாக்கல் பணியின் போது, ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால், அவற்றில் இருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. 2013-ஆம் ஆண்டில் நவீனமயமாக்கப்பட்ட விமான நிலைய முனையங்கள் திறக்கப்பட்ட போது, அவற்றுக்கு மீண்டும் இந்த பெயர்கள் சூட்டப்படவில்லை. அவை  சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என்றே அழைக்கப்பட்டன.

Ramdoss has demanded that the Chennai airport be named after Anna and Kamaraj

அறிவிப்பிலும் தலைவர்கள் பெயர் புறக்கணிப்பு

உள்நாட்டு முனையத்தின் பழையக் கட்டிடத்தின் மீது காமராஜர்  உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை இருந்தது. ஆனால், அதுவும் கடந்த 2020-ஆம் ஆண்டில் தகர்க்கப்பட்டு விட்டது. அதன்பின்னர்  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் நீடிப்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. சென்னை விமான நிலையத்தின் இணையதளத்தில் மட்டுமே உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்திலும், விமானங்களிலும் செய்யப்படும் அறிவிப்புகளில் சென்னை உள்நாட்டு விமான நிலையம், சென்னை பன்னாட்டு விமான நிலையம் என்றே பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விமான பயணச்சீட்டுகளிலும் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. நீண்ட காலமாக தொடரும் இந்த அநீதியை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் எந்த பயனும்  ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Ramdoss has demanded that the Chennai airport be named after Anna and Kamaraj

அண்ணா, காமசாரசர் பெயரை மீண்டும் சூட்டிடுக

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கும், தலைவர்களின்  பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சென்னை விமான நிலையப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பது உண்மை தான். ஆனால், அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பிறகு தான் தலைவர்களின் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விமான நிலையங்கள் ஆணையம் நினைத்தால் சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் காமராசர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயர் பலகை அமைக்க முடியும். அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையக் கட்டிடங்கள் மீதும் இத்தகைய பெயர் பலகைகளை பொறுத்த முடியும். அது தான் முறையாகும். சென்னை விமான நிலையங்களின் முனையங்களுக்கு காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்களை சூட்டுவது விமான நிலையத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக முனையங்களின் பெயர்களை அழித்து விட்டு விமான நிலையத்தை இயக்குவது எந்த வகையிலும் முறையல்ல. எனவே,  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும். விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர் பொறித்த பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். விமான பயணச் சீட்டுகளிலும் காமராசர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர்கள் அச்சிடப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனே நடைமுறைக்கு வருவதை விமான நிலையங்கள் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios