உடல்நலக்குறைவால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பூரட குணம் பெற்று மீண்டும் பணி தொடர விழைகிறேன் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழ்நாட்டு பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல. கணேசன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். 

அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொது பணியை தொடங்க வேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கனவே உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்களும் நலம் பெற்று மீண்டும் தம் பொது வாழ்க்கையைத்  தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.  கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பல அரசியல்வாதிகளும் மக்கள் பணியாற்றும் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை திமுக எம்எல்ஏ அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால்உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் மன மாச்சரியங்களை மறந்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி கொள்கை ரீதியில் நேரெதிர் அரசியல் முகாமிலுள்ள தலைவர்களுக்கு விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் நாகரீகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாஜக, இந்து முன்னணி மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் மத்தியில்  இந்த அறிக்கை அதிக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.