Asianet News TamilAsianet News Tamil

1007 நாட்களாக முடிவெடுக்க முடியவில்லையா..? ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss urges Tamil Nadu government to press for governor
Author
Tamil Nadu, First Published Jun 11, 2020, 11:37 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.Ramadoss urges Tamil Nadu government to press for governor

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 29 ஆண்டுகளுக்கு முன் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி இரவு சிபிஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால், ராஜீவ் கொலை குறித்த சில விளக்கங்களைப் பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்த்தனர். ஒளி மங்கிய வேளையில் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட பேரறிவாளனின் வாழ்க்கை அதன் பின்னர் இருள் சூழ்ந்ததாக மாறி விட்டது.

Ramadoss urges Tamil Nadu government to press for governor

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பதின்வயதில் கைது செய்யப்பட்டு வாழ்நாளின் பாதியை இழந்து விட்ட பேரறிவாளனின் விடுதலைக்காக, தங்கள் உயிரில் பாதியை இழந்து விட்ட அவனது பெற்றோர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய தமிழக ஆளுநர் எந்த மனிதநேயமும் இல்லாமல் அது குறித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

தகுதியின் அடிப்படையில் பார்த்தாலும், மனிதநேய அடிப்படையில் பார்த்தாலும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டியவர் ஆவார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்துப் பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்ச நீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருக்கிறார்.

அதன் அடிப்படையிலேயே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை உருவாக்கியது யார்? என்பதை இன்னும் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாலும் கூட, அதற்கு புலனாய்வு அமைப்புகளால் பதில் கூற முடியவில்லை. வெடிகுண்டு தயாரித்தவர்களே யார் என்று தெரியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கித் தந்தார் என்று பேரறிவாளனை கைது செய்து 30 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அதை விட இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவ்வாறு அனுப்பி இன்றுடன் 1,007 நாட்கள் ஆகியும் அதன்மீது முடிவெடுக்கவில்லை.

அமைச்சரவையின் பரிந்துரை மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமில்லை.Ramadoss urges Tamil Nadu government to press for governor

இது தொடர்பாக எத்தகைய சட்ட ஆலோசனைகளை நடத்துவதாக இருந்தாலும் அதற்கு ஒரு மாதம் அவகாசம் போதுமானதாகும். அவ்வாறு இருக்கும் போது 1,007 நாட்களாகியும் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்றால், அதற்கு 7 தமிழர்களும் விடுதலையாகி விடக் கூடாது என்ற எண்ணம் தான் காரணமாக இருக்க வேண்டும். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியில் இருப்பவர் சட்டத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, வேறு காரணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது. அது அறமாக இருக்காது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் தொடர்ந்து 30-வது ஆண்டாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே இந்த 30 ஆண்டுகளில் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்துவிட்டனர். இனியாவது அவர்கள் தங்களின் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும். அதை உணர்ந்து அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்" அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios