Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி, மோடி ஆட்சி தொடர ஒட்டு போட்டதற்கு நன்றி... ராமதாஸ் ஹேப்பி அறிக்கை!

மத்தியிள் மோடியையும், மாநிலத்தில் எடப்பாடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss thanks Statements For voters
Author
Chennai, First Published Apr 19, 2019, 3:31 PM IST

மத்தியில் மோடியையும், மாநிலத்தில் எடப்பாடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2019 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் 18 தொகுதிகளிலும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்துள்ளன. மக்கள் காலை முதலே ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் வந்து ஜனநாயகக் கடமையாற்றினர்.

தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளிலும் சராசரியாக 70.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் துல்லியமாக வாக்கு விவரம் கிடைக்கும் போது இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவு அளவு சற்று கூடுதலாக 71.62 விழுக்காடாக உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் இப்போது நடைபெற்று வரும் நல்லாட்சிகள் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் இந்த அளவுக்கு திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பது திண்ணம். 

பணத்தை வாரி இறைத்து வாக்குகளை வாங்குவது, வன்முறைகளை நடத்தி, மக்களை அச்சுறுத்தி அதன் மூலம் களச்சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது உள்ளிட்ட செயல்களை அரங்கேற்றுவது எதிர்க்கட்சிக் கூட்டணியின் வழக்கமாகும். இந்த முறையும் அத்தகைய செயல்களை கட்டவிழ்த்து விட்டாலும் அவற்றால் மக்களின் மன உறுதியை அசைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

மக்கள் நலப் பணிகளும், வளர்ச்சிப் பணிகளும் தொடர வேண்டும்; மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், எதிர்பார்ப்பிலும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய வெற்றிக் கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் அலை அலையாக வந்து வாக்களித்துள்ளனர்.

அரியலூர், ஆம்பூர் உள்ளிட்ட சில இடங்களில் எதிர்க்கட்சியினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டாலும் அவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. பொதுவாக சட்டம் - ஒழுங்கும், பொது அமைதியும் பாதிக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்த தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் பணி பாராட்டத்தக்கது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருப்பது மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாமக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக தலைமையிலான அணியின் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பாமக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios