தகுதியும் திறமையும் இல்லாத, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுத்த, பணம் மட்டுமே உள்ள மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எளிதாக சேர்ந்து விடுகின்றனர் என ராமதாஸின் அசத்தலான அறிக்கை அனல்பற்ற வைத்திருக்கிறது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் பலர் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணக் கொள்ளையால், அப்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்காக மத்திய அரசின் சார்பில் இரு காரணங்கள் கூறப்பட்டன. நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்களை மட்டும் தேர்வு செய்து மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் மருத்துவப் படிப்பு வணிகமயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது ஆகியவை தான் அந்த இரு காரணங்கள் ஆகும். ஆனால், அந்த இரு நோக்கங்களும் இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மருத்துவக் கல்வி இயக்குனரகம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு விட்டன. நீட் தேர்வில் கூடுதலாக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய மாணவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை தில்லியில் உள்ள மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் இருப்பதால் கணிசமான மதிப்பெண் பெற்ற ஏழை & நடுத்தர குடும்பத்து மாணவர்களால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர இயலவில்லை. அதேநேரத்தில் தகுதியும் திறமையும் இல்லாத, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுத்த, பணம் மட்டுமே உள்ள மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எளிதாக சேர்ந்து விடுகின்றனர்.

உதாரணமாக சென்னையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவப்படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கதிரியக்கவியல் உள்ளிட்ட சில சிறப்புப் பிரிவுகளுக்கு ரூ.60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் ரூ.20 லட்சம் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர பிற கட்டணங்கள், விடுதிக்கட்டணம் என ஆண்டுக்கு குறைந்தது ரூ.15 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் விடுதிக் கட்டணமாக மாதத்திற்கு ரூ.2 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வசூலிக்கிறது. இது அப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கல்விக் கட்டணத்தை விட பல லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக ஒரு மாணவன் ஆண்டுக்கு ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை செலவழிக்க வேண்டும் என்றால், அது எந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு சாத்தியமாகும்? அதேநேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்புகளுக்கு மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. புகழ்பெற்ற அரசு சென்னை மருத்துவக் கல்லூரியில் ரூ.30,855 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்., எம்.சிஎச் படிப்புகளுக்கு ரூ.12 ஆயிரமும், எம்.டி படிப்புக்கு 16,400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.11.50 லட்சம் வரையிலும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு கல்லூரிகளை விட 300 மடங்கு வரையிலும், தனியார் கல்லூரிகளை விட 20 மடங்கு வரையிலும் அதிக கட்டணத்தை நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது சமூக அநீதி இல்லையா?

இளநிலை மருத்துவப் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் ரூ.11,000 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் வரை மருத்துவக்கல்வி இடங்களுக்கு நன்கொடையாக ரூ.50 லட்சம் வரை வசூலித்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஆண்டுக்கட்டணமாக சில லட்சம் மட்டுமே பெற்றன. ஆனால், இப்போது நன்கொடை பெறாமல் அதைவிட பல மடங்கு தொகையை அதிகாரப்பூர்வமாகவே கட்டணமாக பெறுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் சட்டவிரோத கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது தான் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள எதிர்மறைப் பலன் ஆகும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கிறது. தனியார் கல்லூரிகளின் கட்டணத்தை அரசால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்மானிக்கிறது. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மட்டும் அவற்றின் கட்டணத்தை அவையே நிர்ணயித்துக் கொள்கின்றன. இது என்ன நீதி?

மத்திய அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவ நிகர்நிலைப்பல்கலைக்கழங்களின் கட்டணத்தை குறைக்கவும், இனிவரும் ஆண்டுகளில் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நிகர்நிலைப் பல்கலை.களுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி, அரசு & தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். அதுவே சமூக நீதியை காப்பாற்றும் என தனது அறிக்கையில் கோரியுள்ளார்.