To protect all areas of the old town district of Agriculture to declare the zone. Youth leader is urging the mouthpiece on 3 entrees MB leadership along with the people that go netuvacal conducted ttam Bora.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெடுவாசலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சட்டம் - ஒழுங்கு சிக்கலாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக கவர்னரும் முதலமைச்சரும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களை சமாதானம் செய்ய வேண்டும். இந்த பிரச்சனை பெரிய அளவில் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழைய தஞ்சை மாவட்ட பகுதிகள் அனைத்தையும் பாதுகாக்க வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 3ம் தேதி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எம்பி தலைமையில், நெடுவாசல் சென்று அந்த மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

மருத்துவ நுழைவு தேர்வு விவகாரத்தில் சரியான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் இதனால் விண்ணப்பிக்காதவர்களின் நிலைமை கேள்வி குறியாகி இருக்கிறது.

எனவே சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வி துறை அமைச்சர் ஆகியோர் டெல்லி சென்று ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான சட்டத்துக்கு அனுமதியை வாங்கி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம். சேலம் வந்த என்னை அனைத்து தொழிற்சங்கத்தினரும் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். சேலம் இரும்பலையை தனியார்மயமாக்க விட மாட்டோம், தொடர்ந்து நாங்கள் இதற்காக போராடுவோம்,

தண்டிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளில் தலைமை தாங்க தடை செய்ய வேண்டும். இதற்கு தேவையான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான மசோதாவை நிதிநிலை அறிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தில் கொண்டுவரவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீடிக்காது. ஏன் என்றால் பெரும்பான்மையைவிட 5 பேர் தான் அதிகமாக உள்ளனர். இவர்கள் 5 பேரும் ஏதாவது செய்துவிட்டால் அரசு கவிழ்ந்துவிடும்.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்த அணையை கட்ட தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை சம்பந்தமாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில்அன்புமணி எம்பி பேசியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து எதுவும் பேசவில்லை. அப்போது ஜெயலலிதா சாப்பிடுகிறார், பேசுகிறார், நன்றாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று பொய் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அந்த நேரத்தில் வாய்திறக்காத பன்னீர்செல்வம் இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறார். எல்லோருமே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நாங்களும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.