Asianet News TamilAsianet News Tamil

அப்போவே நானும் ஜெயலலிதாவும் துணிச்சலாக விரட்டியடித்தோம்... திரும்பவுமா? எடப்பாடியை உசுப்பிவிடும் ராமதாஸ்!!

இந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று  முதன்முதலில் அறிக்கை விட்டேன்,. அந்த அறிக்கையைப் பார்த்த, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது என ஹிந்தியை எதிர்க்க  எடப்பாடி பழனிசாமியை உசுப்பேத்தி விட்டுள்ளார் ராமதாஸ்.

Ramadoss Said we fight against Hindi
Author
Chennai, First Published Jun 26, 2019, 1:09 PM IST

இந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று  முதன்முதலில் அறிக்கை விட்டேன்,. அந்த அறிக்கையைப் பார்த்த, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை கட்டாயப்பாடமாக்க மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அம்பலமாகியுள்ளன. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகங்களின் துணையுடன் உயர்கல்வியில் இந்தியைத் திணிக்க பல்கலைக்கழக மானியக்குழுவும், மத்திய அரசும் முயல்வது கண்டிக்கத்தக்கது.

நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் இந்தியை கட்டாய மொழியாக்க மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் விரும்புவதாகவும், அதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் இணை செயலர் ஜிதேந்திரகுமார் திரிபாதி கடிதம் எழுதியுள்ளார். உண்மையில் இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஆகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இக்கடிதம் குறித்து தில்லியில் நாளை மறுநாள் (28.06.2019) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானதையும், அதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் அடுத்து தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

இந்தியா என்பது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் நாடு ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மட்டும் 22 மொழிகள் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழகத்தின் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக கடந்த காலங்களில் ஏராளமான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என நினைப்பதே மிகவும் கொடூரமானது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கூறியுள்ள காரணங்கள் அபத்தமானவை. தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும், இந்தி மொழி பண்டிதருமான வி.கே. மல்ஹோத்ரா, ‘‘ தேசிய மொழியான இந்தியை உயர்கல்வி வகுப்புகளுக்கு கட்டாயப் பாடமாக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்றுக் கொண்ட மத்திய மனிதவள அமைச்சகம் பல்கலைக்கழகங்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்தும்படி பரிந்துரைத்தாகவும் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது. இந்தி நாட்டின் அலுவல் மொழி தானே தவிர தேசிய மொழி அல்ல. அத்துடன் ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக ஒரு மொழியை அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்துவிட முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை எந்த மொழிக்கும் எதிரி அல்ல. மாணவர்கள் விரும்பினால் இந்தி மட்டுமல்ல, தமிழ் மொழியின் குழந்தைகளான கன்னடம், களி தெலுங்கு, கவின் மலையாளம், துளு உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. 2016&ஆம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதை தெளிவாக கூறியிருக்கிறோம். ஆனால், எந்த மொழியும் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

இதற்கு முன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 28.07.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய இந்தி குழுவின் 30-ஆவது கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியை கட்டாயப்பாடமாக்க முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவை 2014&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானித்த மத்திய அரசு, அதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்தது. அதுகுறித்த ஆதாரங்களைத் திரட்டிய நான், இந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று 13.09.2014 அன்று முதன்முதலில் அறிக்கை விடுத்தேன். அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது.

அதேபோன்ற நிலைப்பாட்டை இப்போதும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை, தலைநகர் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் நேற்றே நிராகரித்து விட்டது. அதை பின்பற்றி தமிழக அரசு பல்கலைக்கழகங்களும் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்; அதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே இந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப்பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios