தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து  கேரள எல்லையோர மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன்  தமிழக முதலமைச்சர் தினமும் ஆலோசனை நடத்த வேண்டும். அறிவுரை வழங்க வேண்டும்.

அச்சுறுத்துவதற்காக அல்ல... முன் எச்சரிக்கையாக: கொரோனா வைரஸ் அச்சம் தணியும் வரை குழந்தைகளும், முதியவர்களும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கலாம். போதிய பாதுகாப்பு வசதிகளுடன் வீடுகளுக்குள் இருப்பது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றும்! மீண்டும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். 

குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள். தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை  இதற்காக கேட்டுப் பெறலாம்.

கொரோனாவை தடுக்க சான்பிரான்சிஸ்கோ நகரில் பொது இடங்களில் இசையுடன் கூடிய கை கழுவும் எந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ளன. 20 வினாடிகளுக்கு  ஒலிக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் அல்லது பிற பாடலை ரசித்தபடியே கைகளை கழுவலாம். சென்னையிலும் இந்த முயற்சியை பரிசீலிக்கலாம்’’எனத் தெரிவித்துள்ளார்.