தனது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து மத்திய , மாநில அரசுகள் மீதுராம்மோகனராவ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று குற்றம்சட்டியிருந்தார். அவரது புகார்களுக்கு என்ன பதில் என்று முதல்வர் ஓபிஎஸ்சுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து ராமதாஸ் அறிக்கை: 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இராமமோகன் ராவ், தமது மகன் மீதான புகார்களுக்காக தமது இல்லத்திலும், தலைமைச் செயலக அறையிலும் சோதனை நடத்த முடியாது என்றும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறியிருக்கிறார். 

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சோதனை நடந்திருக்குமா? என்று திரும்பத் திரும்பக் கேட்டதுடன், இந்த சோதனை நடக்கும் போது அதைத் தடுக்காமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்றும் வினா எழுப்பியுள்ளார். 

இது தமது தவறுக்கு தமிழக அரசை துணைக்கு அழைக்கும் செயல் என்பது ஒருபுறமிருக்க, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான தனது தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இராமமோகன் ராவ் கூறியுள்ள குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மையா? தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறைக்குள் வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலமைச்சர் தொடர்ந்து அமைதி காப்பது இதுகுறித்த ஐயங்களை வலுப்படுத்தும்.