Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர் விழாவால் நேற்று ஒருநாளில் எவ்வளவு இழப்பு தெரியுமா? மொத்தமாக லிஸ்ட் போட்ட ராமதாஸ்...

 கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த பினாமி ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளையும், நீதிமன்ற ஆணைகளையும் மதிக்காமல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கின்றனர். பினாமி ஆட்சியாளர்களின் இந்த திமிர்த்தனம் கண்டிக்கத்தக்கது ஆகும்.

Ramadoss Listed Loss in chennai
Author
Chennai, First Published Oct 1, 2018, 7:04 PM IST

ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். ஆனால், கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த பினாமி ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளையும், நீதிமன்ற ஆணைகளையும் மதிக்காமல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கின்றனர். பினாமி ஆட்சியாளர்களின் இந்த திமிர்த்தனம் கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக பினாமி ஆட்சியாளர்கள் எத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியாளர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களின் விருப்பம் போல அத்துமீறலைத் தொடர்ந்தனர். சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் பதாகை அமைக்க அனுமதி பெற்ற ஆளுங்கட்சியினர் சென்னை முழுவதும் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பதாகைகளை அமைத்திருந்தனர். விழா நடைபெறும் பகுதியில் மட்டும் 1.1 கி.மீ தொலைவில் 200-க்கும் மேற்பட்ட பதாகைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தன. இதை பா.ம.க. கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோத பதாகைகளை அகற்ற ஆணையிட்டது.

Ramadoss Listed Loss in chennai

ஆனால், நேற்று மாலை விழா நடைபெற்று முடியும் வரை ஒரு பதாகை கூட அகற்றப்படவில்லை. நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் நேற்று நடத்திய அத்துமீறல்களால் சென்னை மாநகர மக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. நேற்று அதிகாலை முதல் இரவு வரை சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு நாட்கள் உழைக்கும் சென்னை மக்கள், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் குடும்பத்துடன் வெளியில் சென்று பொழுது போக்குவது வழக்கம். ஆனால், சென்னையின் எந்த பகுதியாக இருந்தாலும் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று வர மணிக்கணக்கில் ஆனதால் பெரும்பான்மையான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் இன்று வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விழா நடந்த பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சென்னை வணிகர்களுக்கு நேற்று ஒருநாளில் ஏற்பட்ட வணிக இழப்பின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் மக்கள் நேற்று மனிதர்களாகவே நடத்தப்படவில்லை; மாக்களைப் போல ஒடுக்கப்பட்டனர்.

சென்னையில் விதிகளை மீறி பதாகைகள் அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் மூத்த நீதிபதி மணிக்குமார் தலைமையில் ஒரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடி விசாரித்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அனைத்து பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் ஆணையிட்ட நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்?

Ramadoss Listed Loss in chennai

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பினாமி அரசு மதிக்காமல் உதாசீனப் படுத்துவது இது முதல் முறையல்ல. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கூட்டம் சேர்ப்பதற்காக மாணவர்களை அழைத்துச் செல்வது தான் வாடிக்கையாக இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கல்வி சார்ந்தது அல்ல என்பதால் மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28&ஆம் தேதி ஆணையிட்டது. ஆனால், 30.09.2017 அன்று சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு விதிகளை மீறி, ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இது கடுமையான நீதிமன்ற அவமதிப்பாகும்.

அதன்பிறகு உயிருடன் வாழும் எவருக்கும் பதாகைகளை அமைக்கக்கூடாது என்று கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அதற்கு அடுத்த நாள் திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்ப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் பதாகைகளும், கட்-அவுட்களும் அகற்றப்படவில்லை. அதற்குப் பிறகும் இத்தகைய அத்துமீறல்களை ஆளுங்கட்சியினர் தொடர்ந்தனர். சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஆளும் அதிமுகவினரின் அத்துமீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.

Ramadoss Listed Loss in chennai

ஜனநாயகத்தின் 3-ஆவது தூண் நீதிமன்றங்கள். அவற்றின் உத்தரவையே அரசு நிர்வாகம் மதிக்கத் தவறினால், அது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்குத் தான் வழி வகுக்கும். எனவே, உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பதாகைகளை அமைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களையும், தடுக்கத் தவறிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை உயர்நீதிமன்றம் தண்டிக்க வேண்டும், இனிவரும் காலங்களில் இத்தகைய விதிமீறல்கள் நடக்காமலிருக்க அது பாடமாக அமைய வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios