பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், அவற்றின் விலையை தமிழக அரசு குறைக்க முடியாது; மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், தமிழகத்திற்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் பற்றி அறியாமல் முதலமைச்சர் இப்படி கூறுவது சரியல்ல.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ரூ. 84.19 ஆகவும், டீசல் விலை 12 காசுகள் உயர்ந்து ரூ.77.25 ஆகவும் உள்ளன. பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை கட்சிகள் வலியுறுத்துவதன் நோக்கம் அவற்றின் மீதான விலை குறித்த கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்பதால் தான். மற்றபடி பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் மத்திய அரசை விட, அதிக வருவாய் ஈட்டுவது மாநில அரசு தான். இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி முறையே ரூ.19.48, ரூ.15.33 மட்டும் தான்.

ஆனால், தமிழக அரசுக்கோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.36, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.45 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.29.54, டீசல் விற்கப்பட்டால் ரூ.21.92 வரியாக கிடைக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கும் நிலையில், எரிபொருட்களின் மீதான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று முதல்வர் கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில் மாநில அரசுக்கு வேறு வருவாய் ஆதாரங்களே இல்லை; அதனால் எரிபொருட்கள் மீதான வரியை குறைக்க முடியாது என்று மாநில அரசின் சார்பில் வாதிடப்படுகிறது. ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக் கொண்டால் கூட, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதால் தமிழக அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் குவிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, அதில் ஒரு பகுதியைக் குறைப்பதால் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது என்பது தான் உண்மை.

உதாரணமாக தமிழ்நாட்டில் இப்போது பெட்ரோல் மீது 34 விழுக்காடும், டீசல் மீது 25 விழுக்காடும் மதிப்புக் கூட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05-ஆம் தேதி வரை இது முறையே 27 விழுக்காடாகவும், 21.40 விழுக்காடாகவும் தான் இருந்தது. மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதற்கு முன்பு வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மதிப்புக் கூட்டு வரியாக ரூ.14.58, டீசலுக்கு ரூ.10.48 மட்டுமே கிடைத்து வந்தது. அதன்பின் வரி உயர்த்தப்பட்டதால் இது முறையே ரூ.18.36, ரூ.12.32 ஆக உயர்ந்தது. கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் வரை இதே அளவில் தான் வரி வரிவாய் கிடைத்து வந்தது. கடந்த ஒரு மாதமாக எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்ததன் விலைவாகத் தான் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் ரூ..21.36, ரூ.15.45 என அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்படுவதற்கு முன் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாயை விட பெட்ரோலுக்கு ரூ.6.78, டீசலுக்கு ரூ.4.97 கூடுதலாக கிடைக்கிறது. இந்த கூடுதல் லாபத்தைக் குறைத்தால் தமிழக அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. இந்த அளவுக்கு விலையை குறைத்த பிறகும் கூட, மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து கிடைக்கும் பங்கையும் சேர்த்து, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.76 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16.95 ரூபாயும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக கிடைக்கும். இதுவே இயல்பாகவும், வழக்கமாகவும் கிடைக்கும் வருவாயை விட அதிகமாகும்.

எனவே, தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரூ.6.78 அளவுக்கும், டீசல் மீதான வரியை ரூ.4.97 அளவுக்கும் குறைக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து பெட்ரோல், டீசல் விலைகள் முறையே ரூ.65, ரூ.55-க்கும் கீழ் குறையும் போது, அப்போதைய சூழலுக்கேற்ப குறைக்கப்பட்ட மதிப்பு கூட்டு வரி விகிதங்களை தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம்.