8 வழிச்சாலை மேட்டரில் திமுக கூட்டணியின் 110 எம்.எல்.ஏக்களும், 37 எம்.பிக்களும் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற தலைப்பில் ராம்தாஸ் தனது முகநூலில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.

அதில், சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இத்திட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தியதுடன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாலைத் திட்டத்திற்கு தடை வாங்கியதும் பா.ம.க. தான். பா.ம.க.வால் தான் உழவர்களின் 7000 ஏக்கர் நிலங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

உயர்நீதிமன்றத் தடைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கேவியட் மனுவையும் அன்புமணி தாக்கல் செய்திருக்கிறார். இந்த நேரத்தில் எதிர்பார்த்ததைப் போலவே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த செய்தி கிடைத்த அடுத்த நிமிடமே, 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராகவும், உழவர்களின் பாதுகாப்புக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்போராட்டமும், அரசியல் போராட்டமும் தொடரும் என்று அன்புமணி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.

எந்தப் பதவியிலும் இல்லாத, 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக யாருக்காக போராடினாரோ, அவர்களில் பெரும்பகுதியினரால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அன்புமணி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிடும் போது நேரம் பிற்பகல் 1.49. தமிழகத்தின் பொறுப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து அறிக்கை வெளியிடும் போது நேரம் மாலை 3.09. அதாவது பொறுப்பில் இல்லாத அன்புமணி அறிக்கை விட்டு, 80 நிமிடங்கள் கழித்து தான் பொறுப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவரால் அறிக்கை வெளியிடவே முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவரின் வேகம் அப்படி.

அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் எவ்வாறு எதிர்கொள்வேன், என்னென்ன காரணங்களைக் கூறி மத்திய அரசின் மேல்முறையீட்டை முறியடிப்பேன் என்பது உள்ளிட்ட விவரங்களை பட்டியலிட்டிருக்கிறார். அரசியல்ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளையும் விளக்கியிருக்கிறார்.

ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ன தெரியுமா கூறியிருக்கிறார். ‘‘தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்று வார்த்தைகளால் வருடி விட்டிருக்கிறார். அதன்பிறகு அன்புமணி இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்? (அன்புமணி என்ன செய்யப்போகிறார்? என்பதை அவரே விளக்கி 80 நிமிடங்கள் கழித்து தான் இதை கேட்கிறார். ஒரு விஷயத்தில் மற்ற தலைவர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை. அன்புமணி என்ன கூறியிருக்கிறார் என்பதை அறியாமலேயே ஒன்றரை மணிநேரம் கழித்து அன்புமணிக்கு வினா எழுப்புகிறார்) என்று கேட்கிறார்.

சாப்பாட்டு ராமன்களை எந்த நேரத்தில் எழுப்பி விட்டாலும் ‘‘எனக்கு சோறு போடு’’ என்பதைத் தவிர அவர்களின் வாய்களில் இருந்து வேறு வார்த்தைகள் வராது. அதேபோல், மு.க. ஸ்டாலின் ஏதேனும் அரசியல் பேச விரும்பினால் அதன் முடிவில், ‘‘ஆக... எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்’’ அல்லது ‘‘ அன்புமணி என்ன செய்யப்போகிறார்?’’ என்று கேட்காமல் ஓய மாட்டார்.
கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அதில் ஒரு பொருள் இருக்க வேண்டும்; அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். அன்புமணி இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்? என்று ஓர் உழவர் கேட்கலாம். ஆனால், ஸ்டாலின் கேட்கலாமா.... கூடாது.

ஏனெனில், அன்புமணி இப்போது எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், மிகவும் பொறுப்பாக பாடுபடுகிறார். ஆனால், ஸ்டாலின் அப்படியல்ல. அவரது ஆணைக்கு கட்டுப்பட 110 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 37 மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களை வைத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எத்தனையோ நெருக்கடிகளை ஸ்டாலின் கொடுக்கலாம்.... ஆனால், அதை செய்ய மாட்டார். மாறாக அன்புமணி என்ன செய்யப்போகிறார்? என்று தான் கேட்பார்.

இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. ஸ்டாலினுக்கு ஓசியில் ஓர் யோசனை சொல்கிறோம். எட்டு வழிச்சாலையின் மொத்த நீளம் 274 கி.மீ. ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு கீழ் இருக்கும் 110 சட்டமன்ற உறுப்பினர்களை இரண்டரை கி.மீக்கு ஒருவர் வீதம் அமரவைத்தும், 37 மக்களவை உறுப்பினர்களை ஏழேகால் கிலோ மீட்டருக்கு ஒருவர் வீதம் அமர வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வைக்கலாம்.

அதற்கு பயன்கிடைக்காது என்று நினைத்தால் அத்தனை பேரையும் பதவி விலக வைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இப்படியாக ஏராளமான வழிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி தர முடியும். அவற்றையெல்லாம் செய்து தாமும் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று நிரூபிக்க முயல வேண்டும்.

அதற்காக மேற்குறிப்பிடப்பட்ட உண்ணாநிலை என்ற போராட்ட வடிவத்தை ஸ்டாலின் செயல்படுத்துவார் என்று நம்புகிறேன். என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.