பிரபல இதழில்  வாசகர்கள் டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் சுவாரஷ்யமாகவும், உருக்கமான பதில் களையும் கூறியுள்ளார் அதில், காடுவெட்டி குருவைப்பற்றியும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்து விட்டு, முகம் தெரியாத வாசகர்களின் கேள்விகளுக்கு குமுதம் வார இதழ் மூலம் பதில் கூறுவது வருத்தம் அளிக்கிறதா?  என்ற கேள்விக்கு ; எந்த வருத்தமும் இல்லை. மாறாக மகிழ்ச்சி தான் பெருக்கெடுக்கிறது. நீங்கள் எல்லாம் முகம் தெரியாத வாசகர்கள் அல்ல. உங்களுக்கான முகம் குமுதம் தான். இவற்றையெல்லாம் கடந்து நான் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலம் வளர்ந்த தலைவன் அல்ல. முகம் தெரியாத மக்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு தான் அவர்களின் ஆதரவையும், அவர்களிடையே செல்வாக்கையும் பெற்றேன்.
1989&ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. 

அன்று தொடங்கி இன்று வரை தமிழகத்தில் என் கால் படாத கிராமங்களே இல்லை. மகிழுந்துகள் செல்ல முடியாத கிராமங்களுக்கு கூட மிதிவண்டிகளில், ஏன் சில நேரங்களில் மாட்டு வண்டிகளில் கூட பயணம் செய்து முகம் தெரியாத மக்களை சந்தித்து பேசியிருக்கிறேன்.

இப்போதும் தைலாபுரம் தோட்டத்தில் பார்வையாளர் நேரத்தில் பா.ம.க. மட்டுமின்றி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை வந்து சந்திக்கலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. இதன்மூலம் சொல்ல வருவது என்னவென்றால் இந்த உலகில் முகம் தெரியாத வாசகர்கள் என்று யாரும் கிடையாது. சாத்தூர் கார்த்திகேயனின் முகம் வேண்டுமானால் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரது பெயர் எனது மனதில் பதிந்து விட்டது. ஆகவே, குமுதம் வாசகர்களின் வினாக்களுக்கு பதில் அளிப்பதில் எனக்கு வருத்தம் இல்லை. மாறாக, மகிழ்ச்சி... மகிழ்ச்சி.. மகிழ்ச்சி!

அடுத்ததாக, காடுவெட்டி குருவின் இழப்பு உங்களை எப்படி பாதித்தது?  கேள்விக்கு, 
பதில்: காடுவெட்டி குருவை எனது மூத்த மகனாகவே நினைத்தேன்; நினைக்கிறேன். குருவின் மறைவை இன்று வரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மறைந்த செய்தி கேட்டவுடன் மயங்கினேன். அந்த பாதிப்பிலிருந்து பல நாட்களுக்கு மீளமுடியவில்லை. இப்போதும் குருவின் மறைவு எனது மனதில் துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது என உருக்கமாக கூறியுள்ளார்.