Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வசதி வாரிய வீடுகள் இனி தனியாருக்கா? ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்..! ராமதாஸ் கவலை

வீட்டு வசதி வாரிய வீடுகள் தனியாருடன் சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த திட்டத்தை கை விட்டு விட்டு வீட்டு வசதி வாரியமே அதன் மேற்பார்வையில் தரமான வீடுகளைக் கட்டி, ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Ramadass has demanded that the Tamil Nadu government should build the Housing Board houses under his supervision and not with private contribution
Author
Tamil Nadu, First Published Apr 22, 2022, 11:02 AM IST

வீட்டு வசதி வாரிய வீடுகளை தனியார் நிறுவனங்களோடு  இணைந்து செயல்படுத்தாமல் தமிழக அரசே தனது மேற்பார்வையில் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் இனி தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் கட்டப்படும்; கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின்படி வீட்டு வசதி வாரியத்திற்கு கிடைக்கும் வீடுகளைக் கூட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் விற்பனை செய்ய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இந்தத்  திட்டம் செயல் வடிவம் பெற்றால் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர்,‘‘வீட்டு வசதி வாரிய நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் கொடுத்து கூட்டு முயற்சியில் வீடுகள் கட்டப்படும். அதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பணம் தரத் தேவையில்லை. மாறாக தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான வீடுகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள வீடுகளைத் தருவார்கள். அதை விற்று பணமாக்கினால் போதுமானது’’ என்று கூறியிருக்கிறார்.

Ramadass has demanded that the Tamil Nadu government should build the Housing Board houses under his supervision and not with private contribution

அமைச்சர் முன்மொழிந்துள்ள திட்டம் வீட்டு வசதி வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை விட  மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அமைச்சர் தெரிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்தினால் வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் எளிமையாகும்; வீட்டு வசதி வாரியத்திற்கு லாபம் கிடைக்கும்; ஆனால், வீட்டு வசதி வாரியம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அது நிறைவேறாது; மாறாக வீட்டு வசதி வாரியமும் ஒரு வீட்டு வணிக நிறுவனமாக மாறி விடும். இது தேவையில்லை. இந்தியா விடுதலை அடைந்த ஆண்டிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டு விட்டது. வீட்டு வசதி வாரியத்தின் இணையதளத்தில், அதன் நோக்கமாக, ‘‘வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ‘அனைவருக்கும் வீடு’ என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG), மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கிட சிறந்த நோக்கத்துடன் செயல்படுகின்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramadass has demanded that the Tamil Nadu government should build the Housing Board houses under his supervision and not with private contribution

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை இதுவரை எட்ட முடியவில்லை என்றாலும் கூட, அந்த இலக்கை நோக்கி வீட்டு வசதி வாரியம் பயணிக்கிறது என்பதை மறுக்க முடியாது. வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழைகளாலும் வீடுகள் வாங்க முடிகிறது. எடுத்துக்காட்டாக சென்னையின் பல பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடி ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டால், வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என்ற அளவில், பாதி விலையில் விற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரிய வீடுகளில் வாகன நிறுத்தம் போதிய அளவில் இல்லாமை உள்ளிட்ட சில வசதிகள் குறைவாக இருந்தாலும் கூட கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நிறைவேற்றுகிறது.  கூட்டு முயற்சியில் தனியாருடன் இணைந்து கட்டப்பட்டால் வீடுகளில் சில வசதிகள் கூடுதலாக இருக்கலாம். ஆனால், அந்த வீடுகளின் விலைகள் ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொடும் உயரத்தில் இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்களின் வீடுகளை  உயர்வகுப்பினரால் மட்டுமே வாங்க முடியும். கூட்டு முயற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழைகளின் வீட்டுக் கனவு கலைந்து விடும். அதிலும் குறிப்பாக, நிலம் கொடுத்ததற்கு ஈடாக வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கப்படும் வீடுகளையும் கட்டுமான நிறுவனத்திடமே வாரியம் விற்கும் விதி செயல்படுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை போன்ற மாநகரங்களில் வீடு வாங்குவதை மறந்து விடலாம்.

Ramadass has demanded that the Tamil Nadu government should build the Housing Board houses under his supervision and not with private contribution

தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வீடுகளை கட்டுவதற்காக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ள காரணத்தை ஏற்க முடியாது. வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமாக கட்ட முடியவில்லை என்பதால் தான், கூட்டு முயற்சியில் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தலைசிறந்த பொறியாளர்கள் வீட்டு வசதி வாரியத்தில் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு தனியாருக்கு இணையான தரத்துடன் வீடுகளை கட்ட முடியவில்லை என்று கூறுவது நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவதாகும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்.எனவே, தனியார்துறை கூட்டு முயற்சியில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வீட்டு வசதி வாரியமே அதன் மேற்பார்வையில் தரமான வீடுகளைக் கட்டி, ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios