Asianet News TamilAsianet News Tamil

ராஜ்யசபா எம்.பி. - உரைப்பதும், உணர்த்துவதும் என்ன..? ரஞ்சன் கோகாய் நியமனம் நியாயமா..?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இது சரியா..? 
 

Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?
Author
Tamil Nadu, First Published Mar 24, 2020, 1:07 PM IST

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இது சரியா..? 

உயர்ந்த தார்மீக நேறிகளின் அடிப்படியில் இது தவறுதான். கண்டிப்பாக இதனைத் தவிர்த்து இருக்க வேண்டும். இந்த நியமனம் குறித்து வலுவாகக் கருத்து தெரிவிக்கிற யாரும், பிரசினையின் ஆழம் வரை செல்லத் தயாராக இல்லை. காரணம் உள்ளே ஒளிந்து கிடக்கும் அரசியல் ஆசை (அ) வன்மம். பாருங்களேன்... ஒருவரேனும் இந்தக் கேள்வியை முன் வைக்கிறார்களா..?Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?

'இந்திய நாடாளுமன்றத்துக்கு, மக்களவை, மாநிலங்களவை என்று இரண்டு அவைகள் தேவைதானா..? ஆம் எனில். ஏன்..? 1918 மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் அறிக்கை - இரண்டு அவைகள் கொண்ட நாடாளுமன்றத்தைப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், இந்திய அரசுச் சட்டம் 1919 மூலம் உருவானது 'ராஜ்ய சபா'. கவர்னர் ஜெனரல் இதன் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம் 1935-லும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

விடுதலைக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையில்,. 'இரண்டாவது அவை' (Second Chamber) குறித்து விரிவாக விவாதம் நடந்தது. மாநிலங்களவைச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையம் கூறுகிறது - 'சுதந்திர இந்தியாவின் சவால்களை சந்திக்க ஒரு அவை போதாது; பல்வகை இயல்புகளைக் கொண்ட பரந்து பட்ட நமது நாட்டுக்கு' இரு அவைகள் தேவை என்று தீர்மானிக்கப்பட்டு, 1954 ஆகஸ்ட் 23 அன்று, 'ராஜ்ய சபா' அறிவிக்கப் பட்டது.

Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?

துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்களைவையின் தலைவர் ஆவார். அரசமைப்பு சட்டம் பிரிவு 80-ன் படி, மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள்- 250. இவர்களில் 12 பேர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவர். இவர்கள் இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவையில் சிறப்பு அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.  

ஏனைய உறுப்பினர்களை, மாநில, யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு மாநிலத்துக்குமான மாநிலங்களவை உறுப்பினர்கள், அட்டவணை IV - குறிப்பிடும் எண்ணிக்கையில் இருப்பர். உறுப்பினர் ஆவதற்கான தகுதி - 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். (பி.84), 

சரி...., மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவைக்கு (மக்களவை) இணையான அதிகாரத்துடன் வேறொரு அவை/ அமைப்பு இருத்தல், ஜனநாயக நெறிகளின்படி சரிதானா..? 'இரு தரப்பு பார்வைகள், கருத்துகளும், மிகுந்து கிடக்கின்றன; பெரும்பாலும் கூரமையாக வேறுபடுகின்றன'. (ஆகஸ்ட் 2009 - ராஜ்ய சபா செயலகம் வெளியிட்ட 'Second Chamber in Indian Parliament: Role and Status of Rajya Sabha')

'ஒரு அவை (மட்டுமே இருந்து) சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதை, தடுப்பதற்கு (மேல்சபை) உதவும்' - ஒரு சாரார். 'உள்ளுக்குள்ளேயே, ஜனநாயகத்துக்கு எதிரானது; மக்கள் விருப்பத்தை மறைப்பது' - எதிர்ச் சாரார்.   

"நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்பாட்டில் இருக்கிற நாடுகளில் 3இல் 1, இரு அவைகளைக் கொண்டுள்ளன". (அதாவது, 3இல் 2 நாடுகளில் இந்த அவை இல்லை.)  செயலக இணையம் சொல்லும் சில 'நியாயங்கள்': 1. ஆளும் கட்சியின் அரசியல் நிர்ப்பந்தங்களால் விளைந்த நடவடிக்கைகள் மீது, 'இரண்டாவது பார்வை' கிடைக்கிறது;  இதன் மீது, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களின் அகன்ற ஆய்வு சாத்தியம் ஆகிறது.Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?


2. கீழ்ச் சபையின் சுமையைக் குறைக்க உதவுகிறது; 3. தேர்தல் அரசியலின் சவால்களை சந்திக்க விரும்பாத, பல்வேறு களங்களில் சிறந்து விளங்கியவர்களின், கற்றல், அனுபவம் பெரிதும் துணை புரியும்.  நேரடியாகக் கூறவில்லை எனினும், மக்களவை உறுப்பினர்களை விடவும், மாநிலங்களவை உறுப்பினர்கள், தீர அலசி ஆராய்ந்து தீர்மானிக்க வல்லவர்களாக, அதற்கான அவகாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு, நம்பிக்கை தொக்கி நிற்பதை உணர முடிகிறது. இதைத்தான் சாசனம் விரும்புகிறது. 

இந்த அவையின் உறுப்பினர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று சாசனம், வெளிப்படையாக வலியுறுத்தவில்லை. ஆனால், இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் முழுப் பட்டியலையும் பொதுத்தளத்தில் வைத்துள்ளது ராஜ்ய சபா செயலகம். உறுப்பினர்களின் பெயர்களுடன், அவர்களைத் தேர்ந்தெடுத்த அரசியல் கட்சிகளையும் சேர்த்தே அடையாளப் படுத்தி உள்ளது. Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?

சட்டம் 'உரைப்பது' மட்டுமல்ல; அது 'உணர்த்துவது' எதுவோ, அதையும் நாம் முழுவதுமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே, சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்; அதன் பயன்பாடு மக்களுக்குச் சேரும்.  மக்களவை முழுவதும் கட்சி உறுப்பினர்களே இருக்கிறார்கள்; மாநிலங்களவையிலும் அப்படியேதான் என்றால், அது எந்த அளவுக்கு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு  நியாயம் சேர்ப்பதாக இருக்க இயலும்..? 

மாண்புமிகு உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் கேள்வி எழுப்பவில்லை. மாறக, அவையின் ஜனநாயகக் கட்டமைப்பை வலிமைப் படுத்தலாமே... என்றுதான் விழைகிறோம்.  மாநிலங்களவையின் நியமன உறுப்பினருக்கு சில சிறப்புத் தகுதிகளை பி.80(3) வலியுறுத்துகிறாற் போல, தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கென்று எதையும் பிரிவு 80(4) குறிப்பிடவில்லை. ஆனால் ஒன்று, 'ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதி' என்று கூறுகிறது. இதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதி என்று  நாம்தான் நடைமுறையில் மாற்றி அமைத்துக் கொண்டோம். 

இரு அவைகளிலுமே அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே இடம் பெறுகிற போது, அவை விவாதங்களில் என்ன பெரிய மாற்றம் இருந்து விடப் போகிறது..? மக்களவையின் நீட்சி அல்ல மாநிலங்களவை; அரசமைப்பு சட்டத்தின் நோக்கம் அதுவன்று. 

சமீபத்து செய்தி - மக்களவையில் ஒரு கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்தது; ஆனால் அதன் மாநிலங்களவை உறுப்பினர், அதற்கு மாறுபட்டு வாக்களித்தார். இது எப்படி..? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பப் படுகிறது. 'குறிப்பிட்ட பிரசினை' குறித்து நாம் பேசவில்லை; மக்களவையில் மாண்புமிகு உறுப்பினர் ஒருவரின் சுதந்திரமான செயல்பாடு, பங்களிப்பு பற்றி மட்டுமே பார்க்கிறோம்.  

கட்சிகளின் ஊதுகுழலாக (மட்டுமே) மாண்புமிகு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே, ஆரோக்கியமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறானது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரதிநிதிகளாய், அவர்களின் குரலாய், சுயமாகச் செயல்பட வேண்டும். அதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் சாரம். 70 ஆண்டுகளாக, நமது தலைவர்களுக்கே இது புரியவில்லை. மக்களைக் குறை சொல்லி, என்ன ஆகப் போகிறது..? Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?

குறிப்பிட்ட 'அசாதாரண' சூழ்நிலையின் போது மட்டுமே, கட்சிக் 'கொறடா' பிறப்பிக்கப்பட வேண்டும். அப்போது உறுப்பினர் தனது கட்சியின் கட்டளைப்படி நடந்தாக வேண்டும். (இதையே கூட முழுமையாக ஏற்பதற்கில்லை) ஒவ்வொரு மாநிலத்திலும், அரசியலில் ஈடுபடாத, தகுதி வாய்ந்த நல்லவர்கள் நிறையவே இருக்கின்றனர். சாதி மதம் கட்சி கடந்து, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு உழைக்கிற, சிறப்பானவர்கள் ஏராளமாய் உள்ளனர். இவர்கள் இடம் பெறுகிற அவையாக, ராஜ்யசபா அமையுமானால் நாட்டுக்குப் பல நன்மைகள் கிட்டும். 

எத்தனை யெத்தனை அறிவார்ந்த அற்புதமான தமிழர்கள் வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர்..! இவர்களில் யாரையேனும், நாடாளுமன்றம் போக, அரசியல் கட்சிகள் அனுமதிக்குமா...? விஞ்ஞானியாக மட்டுமே இருந்த போது, தமிழ்நாட்டில் கூட அதிகம் அறியப்படவில்லை;  நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த போது, அகிலமே திரும்பிப் பார்த்தது. இளைஞர்களின் ஏகோபித்த எழுச்சிமிகு தலைவராக, முன்மாதிரியாக டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் திகழ்கிறார்கள்.  

அரசியல் அற்ற மாநிலங்களவை உறுப்பினர் என்கிற நடைமுறை மட்டும் சாத்தியம் ஆனால், எத்தனை கலாம்கள் உருவாக முடியும்..? ஒவ்வொரு கட்சித் தலைமையும் முடிவெடுத்தாலே போதும்; இது சாத்தியம் ஆகும். 'கொள்கைக்காக' 'நாட்டுக்காக' உயிரையும் கொடுக்கத் தயார் என்று முழக்கம் இடுகிற கட்சிகள், மாநிலங்களவையின் ஓரிரு இடங்களையேனும், மாநில நலனில் அக்கறை கொண்ட சிறப்பானவர்களுக்கு ஒதுக்குமா...? 

இப்படி எதுவும் நடவாத வரையில், அரசியல் நலன்களுக்காக அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் அரசியல் விளையாட்டு, ஜனநாயகத்துக்கு, சாமான்யனுக்கு எந்த நன்மையும் தரப் போவதில்லை. இதைப் புரிந்து கொண்டு, விவாதிப்போம் வாருங்கள்- 'இவரை' நியமித்தது சரியா... தவறா..?'

 Rajyasaba MP - What is texting and conveying ..? Is Ranjan Kokai's appointment justified?

-எழுத்தாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,வருமானவரிதுறை (ஓய்வு) 

Follow Us:
Download App:
  • android
  • ios