அதிமுக சார்பில் பாமகவிற்கு வழங்கப்பட உள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியில் அன்புமணி ராமதாஸ் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தார் அன்புமணி ராமதாஸ். இதன்பிறகு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட அவர் முடிவெடுத்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற துணிச்சலில் அதன் பிறகு கட்சிப் பணிகளில் அன்புமணி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். இதற்கிடையே காடுவெட்டி குரு விவகாரம், வேல்முருகன் எழுச்சி போன்றவை பாமகவின் வாக்கு வங்கியில் ஓட்டைகளை விழ வைத்துள்ளதாக கூறுகிறார்கள். 

எனவே மீண்டும் கட்சியை பலப்படுத்தி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக அன்புமணி வியூகம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் இளைஞர்களை நேரில் சந்திக்கும் ஒரு திட்டத்துடன் அன்புமணி தனது பயணத்தை விரைவில் துவங்க உள்ளதாக சொல்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அன்புமணியின் அரசியல் பிரச்சார குழு தீவிரமாக செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கூறியபடி ராஜ்யசபா எம்.பி. பதவியை பாமகவிற்கு தர தயாராக இருப்பதாக அதிமுகவிலிருந்து ராமதாஸுக்கு தகவல் வந்துள்ளது. இதே தகவலை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அன்புமணி பாமகவின் பிரதிநிதியாக ராஜ்யசபா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாக வரும் மக்களவை இறுதியாகவும் இருந்து விட்டதால் மீண்டும் எம்.பி.யாக அன்புமணி விரும்பவில்லை என்கிறார்கள். தேர்தலில் வென்ற மத்திய அமைச்சராகும் கனவுடன் அன்புமணி இருந்துள்ளார். ஆனால் அது நிறைவு பெறாத காரணத்தினால் கட்சிப் பணிகளில் ஈடுபட அவர் முடிவெடுத்துவிட்டார். ராஜ்யசபா எம்.பி. ஆகும் பட்சத்தில் டெல்லிக்கு அடிக்கடி சென்று வரவேண்டும். ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த நன்மைகளும் தனது அரசியல் வாழ்வில் ஏற்படப் போவதில்லை என்று அன்புமணி உணர்ந்து வைத்துள்ளார். 

எனவே ராஜ்யசபா எம்.பி. பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்து விடலாம் என்று அன்புமணி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் எம்.பி.யாக்க பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதியாக உள்ளார். எனவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி.யாக விருப்பம் இல்லை என்றால் அவரது மனைவி சௌமியா அன்புமணியை எம்.பி.யாக ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். 

ஏற்கனவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தர்மபுரியில் சௌமியாவை களமிறங்குவது குறித்து ராமதாஸ் ஆலோசனை செய்தார். ஆனா அன்புமணி தேர்தலில் போட்டியிட வில்லை என்றால் மற்ற வேட்பாளர்கள் மனதளவில் பின்னடைவை சந்திப்பார்கள் என்று கூறி அன்புமணியை தர்மபுரியில் நிறுத்தினர். இந்த நிலையில்தான் மாநிலங்களவை எம்பி பதவியில் புதிய திருப்பமாக சௌமியா அன்புமணியின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது.