வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் தோல்வியை தழுவிய ஏ.சி.சண்முகம் ராஜ்ய சபா எம்.பி.,யாக நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கிறார். 

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கிய ஏ.சி.சண்முகம் 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்றார். 

இம்முறை அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட்டதால் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்தத் தோல்வி அதிமுகவினரை மட்டுமல்ல, பாஜகவினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தோல்வி தெரிய வந்தவுடன் வீட்டுக்குச் சென்றவர் இரண்டு, மூன்று தினங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் அதிமுகவின் அலட்சியத்தால் தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதேவேளை முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவராகரமே இந்த தோல்விக்கு காரணம் என பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது.

 

இருப்பினும், தேர்தல் நேரங்களில் பாஜகவுக்கு பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருந்து வந்ததையும், செல்வாக்குள்ள மனிதர் என்பதையும் உணர்ந்து கொண்ட பாஜக ஏ.சி.சண்முகத்தை தேற்றும் வகையில் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. 

கர்நாடாக மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், அதற்காக சில விஷயங்களை ஏ.சி.எஸ் அம்மாநில பாஜகவுக்கு செய்து தர சம்மதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.