விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடனான தனது மலரும் நினைவுகளை மேடைதோறும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்து வருகிறார். மேலும், விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் மேடைக்கு மேடை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். 


இந்நிலையில், சென்னையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துடன் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான யோகேஸ்வரன், சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசுவதாக தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.