Rajinis entry will see the politics of Dravidian parties in Tamil Nadu for over 60 years

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் அரசியலை ரஜினியின் எண்ட்ரி ஆட்டம் காணவைக்கும் எனவும் ரஜினியின் ஆன்மீக அரசியல் மோடிக்கு நெருக்கமானது எனவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார். 

முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார். 

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். 

மேலும் பேசிய ரஜினி, தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 

ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். 

அதில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் அரசியலை ரஜினியின் எண்ட்ரி ஆட்டம் காணவைக்கும் எனவும் ரஜினியின் ஆன்மீக அரசியல் மோடிக்கு நெருக்கமானது எனவும் தெரிவித்துள்ளார்.