தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரதத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடகாவுக்கு எதிராக பேசினால் தன் நிலை என்னவாகும்?! என்பதை நினைத்தாலே தலீவருக்கு ‘அப்டீயே தலை சுத்துது’ இப்போ!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழக நடிகர்-நடிகைகள் வரும் 8-ம் தேதியன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் இது தமிழர் நலன் தொடர்பானது, தமிழக மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதால் நிச்சயம் கமலும், ரஜினியும் வந்து நிற்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதிலும் அரசியல் பாதையில் கால் வைத்திருக்கும் இருவருக்கும் இந்த மேடை அவசியமானதே. 

கமலை பொறுத்தவரையில் கவலையில்லை. நடிகர் சங்கம் போட்டுக் கொடுக்கும் மேடையில் நின்று  மத்திய அரசு , கர்நாடகா இரண்டையும்  கிழித்தெடுப்பது மட்டுமில்லாமல் போனஸ் டார்கெட்டாக தமிழக அரசையும் தாளித்தெடுப்பார். 

ஆனால் ரஜினியின் நிலைதான் இதில் பெருங்கஷ்டம். காரணம்? ஆன்மிக அரசியல் நடத்தப்போகிறேன்! என்று சொல்லி வரும் ரஜினியின் பின்புலமாக பி.ஜே.பி. இருக்கிறது என்பதுதான் பொதுவான விமர்சனமாக இருக்கிறது. மோடி மற்றும் பி.ஜே.பி. முக்கியஸ்தர்கள் அனைவரும் ரஜினியின் நண்பர்கள் என்பதால் காவிரி விவகாரத்தில் பி.ஜே.பி. அரசையோ அல்லது பர்ஷனலாக மோடியையோ கண்டித்து ரஜினியால் பேசுவது முடியாத காரியம். 

அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தந்திருந்த கால அவகாசத்தின் கடைசி நாளன்று ‘மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு’ என்று ரஜினி ட்விட் செய்திருந்தார். இதற்கே கர்நாடகாவில் ரஜினியை தெறிக்கவிட்டு விட்டனர். ரஜினி கர்நாடகாவுக்குள் கால் வைக்க விடமாட்டோம்! அவரை படத்தை விரட்டியடிப்போம்! என்றெல்லாம் கொதித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சஙக் கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடகாவுக்கு எதிராக பேசுவாரா என்பது பெரிய கேள்விக்குறியே. ரஜினிக்கென்று அம்மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதும் அவரது மனக்கண்ணில் வந்து வந்து மறைகிறது. 

மத்திய அரசு, கர்நாடக அரசு இரண்டையும் விமர்சிக்காமல் மெளனமாக அந்த கண்டன நிகழ்வில் அமர்ந்துவிட்டு வந்தால் தமிழக மீடியாக்கள் கழுவிக் கழுவி ஊற்றிவிடும் ரஜினியை.

ஆக எந்தப்பக்கம் திரும்பினாலும் இடி விழுமென்பதால் ரஜினி என்ன செய்யப்போகிறாரோ?!