நடிகர் ரஜினி ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த டிசம்பர் 31ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். அந்த சமயத்தில் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார் இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத். அதன் பிறகு ரஜினிக்கு ஆதரவாக அர்ஜூன் சம்பத் தொடர்ந்து பேசி வருகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களிலும் கூட ரஜினியின் ஆன்மிக அரசியலை முன்னிறுத்து அர்ஜூன் சம்பத் வாதங்களை எடுத்து வைத்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அர்ஜூன் சம்பத் முடிவெடுத்தார். இந்த பயணத்திற்கு ஆன்மிக அரசியல் பயணம் என்றும் பெயர் சூட்டினார்.

மேலும் ஆன்மிக அரசியல் பயணம் என்கிற பெயரை பயன்படுத்திக் கொள்ள ரஜினியிடமும் அர்ஜூன் சம்பத் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பயணத்தை திருவள்ளூரில் தொடங்குவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்தார். ஆனால் ஆன்மிக அரசியல் பயணம் என்ற பெயரில் மத ரீதியிலான பயணத்திற்கு அனுமதி கொடுக்க மாவட்ட நிர்வாகங்கள் மறுத்தன. மேலும் அர்ஜூன் சம்பத்தின் ஆன்மிக அரசியல் பயணத்திற்கு தடைகளும் விதிக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று அர்ஜூன் சம்பத் ஆன்மிக அரசியல் பயணத்திற்கு அனுமதி பெற்றார். இதன் பிறகே இன்று அந்த பயணம் சென்னை அருகே தாம்பரத்தில் துவங்கியுள்ளது. இதனிடையே ஆன்மிக அரசியல் பயணம் என்கிற பெயரில் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை தடுக்கவே தங்கள் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

தற்போது தடைகளை தகர்த்து ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த விழிப்புணர்வு பேரணி தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பேரணிக்கு உயர்நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், அதனை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.